சமாஜ்வாதி பூசல்: அடம் பிடிக்கும் அகிலேஷ்; கண்ணீர் விட்ட அமர்சிங்

சமாஜ்வாதி பூசல்: அடம் பிடிக்கும் அகிலேஷ்; கண்ணீர் விட்ட அமர்சிங்
Updated on
2 min read

உத்தரப் பிரதேசத்தின் சமாஜ்வாதி கட்சியில் நிலவும் பூசல் முடிவிற்கு வந்தபாடில்லை. இதற்கு தந்தை முபாயம்சிங் யாதவ் மற்றும் மகன் அகிலேஷ்சிங் யாதவ் ஆகியோருக்கு இடையே நிலவும் பிடிவாதம் காரணம் எனக் கருதப்படுகிறது.

உத்தரப் பிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாதியின் குடும்ப உறுப்பினர்களின் கருத்து வேறுபாடு காரணமாக கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. இதன் மீதான சமாதானப் பேச்சுவார்த்தை முலாயம்சிங் யாதவ் மற்றும் அவரது மகன் அகிலேஷுக்கு இடையே தொடர்ந்து வருகிறது.

இம் மாநில சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 11 முதல் மார்ச் 8 வரை என ஏழு கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பும் பிரச்சனை முடிந்தபாடில்லை. எனினும், பிரச்சனைக்கு முடிவுகட்ட வேண்டி முலாயம்சிங் தன் முடிவுகளில் இருந்து சற்று இறங்கி வந்துள்ளார்.

தன் மகனை கட்சியின் தேசிய தலைவர் பதவிக்கு ஏற்க சம்மதித்து விட்டதாகக் கூறப்படுகிறது. இத்துடன், தன் சகோதரர் சிவபால் யாதவை உபி மாநில தலைவராகவும், அமர்சிங்கை கட்சியிலும் மீண்டும் சேர்க்க நிபந்தனை விதித்துள்ளார்.

முலாயமின் இந்த முடிவுகளை எடுத்து சொல்ல சிவபால், அகிலேஷை அவரது முதல் அமைச்சர் இல்லத்தில் சந்திக்க நேற்று (வெள்ளிக்கிழமை) சென்றிருந்தார். ஆனால், சித்தப்பா சிவபாலை சந்திக்க வீட்டில் இருந்த அகிலேஷ் மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது குறித்து ‘தி இந்து’விடம் முலாயமின் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகையில், ‘சிவபால் மற்றும் அமர்சிங் விவகாரத்தில் அகிலேஷ் தொடர்ந்து அடம் பிடிப்பதால் அவர்கள் இருவரும் கட்சியில் இருந்து விலகிக் கொள்வதாக விருப்பம் தெரிவித்தனர். இதற்கு மிகுந்த கோபம் கொண்ட முலாயம், தான் இதை அனுமதிக்க முடியாது என கண்டிப்புடன் கூறி விட்டார். இதனால், குடும்ப பூசல் முடிவிற்கு வருவதாக தெரியவில்லை’ எனத் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சிகளை வெளிப்படையாக கூறாத நிலையில் அமர்சிங் கலங்கிய கண்களுடன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘தற்போது கட்சியில் எந்த அதிகாரமும் இன்றி முலாயம் தனித்து விடப்பட்டுள்ளார். அவரை இந்தநிலையில் பார்க்க எங்களுக்கு சக்தி இல்லை. ஒரு கட்சித் தலைவரின் அதிகாரம் என்பது அவருடைய ஆதரவாளர்கள் எண்ணிக்கையில் அன்றி தகுதியில் பார்க்கப்பட வேண்டும். அகிலேஷை அவரது 5 வயது முதல் பார்ப்பவர் சிவபால். அவரது கல்வி மற்றும் தனிப்பட்ட வாழ்கையில் நான் செய்த உதவிகள் அனைவரும் அறிந்ததே.’ எனத் தெரிவித்தார்.

இதற்கிடயே, சிவபாலுக்கு நெருக்கமானவர்களாகக் கருதப்படும் உபி மாநில போக்குவரத்துத்துறை அமைச்சரான காயத்ரி பிரசாத் பிரஜாபதி மற்றும் கவுமி ஏக்தா தளம் கட்சியில் இருந்து சமாஜ்வாதி இணைந்த சிபக்துல்லா அன்சாரி ஆகியோரும் அகிலேஷுக்கு ஆதரவு கடிதம் அளித்து விட்டனர்.

இவர்கள் உட்பட மொத்தம் 212 எம்எல்ஏக்கள், 15 எம்பிக்கள் மற்றும் 58 எம்எல்சிக்கள் அகிலேஷுக்கு ஆதரவுக்கடிதம் அளித்துள்ளனர். இவை மத்திய தேர்தல் ஆணையத்தில் ஒப்படைக்கப்பட்டிருப்பதால் சைக்கிள் சின்னம் தமக்கே கிடைக்கும் என அகிலேஷ் நம்புகிறார்.

இத்துடன் மேலும், சமாஜ்வாதியின் 5000 நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் ஆதரவுக்கடிதங்களையும் தேர்தல் ஆணையம் கோரியுள்ளது. இவை வரும் திங்கள் கிழமை ஒப்படைக்கப்படும் என அகிலேஷ் தரப்பு கூறியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in