

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்குகள் வருகிற மார்ச் 21-ம் தேதி முதல் நாள்தோறும் விசாரிக் கப்பட்டு 3 வாரங்களுக்குள் தீர்ப்பு அளிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கர்நாடகா, தமிழகம், கேரளா, புதுவை உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு இடையே நிலவும் காவிரி நதிநீர் நீர் பங்கீட்டு பிரச்சினையை விசாரித்த காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.
இதை எதிர்த்து கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தன. இவ்வழக்கில் 4 மாநில அரசுகள் தரப்பிலான அனைத்துக்கட்ட வாதமும் நிறைவடைந்தது.
இந்நிலையில், ‘இவ்வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை’ என மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பளிக் கும் என நீதிபதிகள் அறிவித்தனர். இதைத் தொடர்ந்து காவிரி தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவ ராய், ஏ.எம்.கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழகம், கர்நாடகா ஆகிய மாநில அரசுகள் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்புகள் மீது கொண்டுவரப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்த பிரமாணப் பத்திரங்களை நேற்று தாக்கல் செய்தன. இதை தொடர்ந்து நீதிபதி தீபக் மிஸ்ரா,“காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக தமிழகம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநில அரசுகள் தாக்கல் செய்துள்ள அனைத்து மனுக்களையும் உச்ச நீதிமன்றம் விரைவில் விசாரித்து தீர்ப்பளிக்கும்.
காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை வரும் மார்ச் 21-ம் தேதி முதல் நடத்தப்படும். நாள்தோறும் விசாரணை நடத்தப்பட்டு 3 வாரங்களுக்குள் இறுதி விசாரணை நடத்தி முடிக்கப்படும். அதாவது ஏப்ரல் 11-ம் தேதிக்குள் அனைத்து தரப்பு இறுதிவாதமும் முடிக்கப்பட்டு, தீர்ப்பு அளிக்கப்படும்'' என தெரிவித்தார். இதையடுத்து காவிரி தொடர்பான வழக்குகள் வருகிற மார்ச் 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.