Published : 18 Jan 2017 10:42 AM
Last Updated : 18 Jan 2017 10:42 AM

மத்திய ஆயுதப் படை வீரர்களின் குமுறல்கள் நியாயமே

முதுகில் சிறு கொப்புளம் தோன்றினால் சட்டையை இழுத்துவிட்டு மறைக்கலாம்; அதுவே முகத்தில் பருவாகத் தோன்றி னால் மறைக்க முடியாது - பார்ப்பவர் கள் சுட்டிக்காட்டுவார்கள். அதைப் போக்க பிதுக்கு மருந்து (ஆயின்மென்ட்) போடுவீர்கள், மாத்திரைகளை விழுங்குவீர்கள். உடல் முழுக்கக் கொப்புளங்களாகிவிட்டால் என்ன செய்வது? எப்படி மறைப்பது? உடனே நல்ல மருத்துவரை நாடி ஓடுவீர்கள். ஒவ்வாமை, புற்றுநோய், அல்லது நீரிழிவு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றாக சாதாரண கொப்புளம் இருக்கக்கூடும்.

எல்லை பாதுகாப்புப் படை (பி.எஸ்.எஃப்.), மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எஃப்.) ஆகியவற்றில் பணிபுரியும் இரு வீரர்களிடமிருந்து சமூக வலைதளங்களுக்கு 2 தகவல்கள் அனுப் பப்பட்டுள்ளன. இப்போதைக்கு ‘2 பருக்கள்’ தோன்றியுள்ளன.

தங்களுக்கு வழங்கப்படும் சுவையற்ற - சத்தற்ற உணவு பற்றி தெரிவித்த எல்லை பாதுகாப்புப் படை வீரர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு முன்னதாக, அப்படைப் பிரிவின் தலைமை அதிகாரியை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். வீரரின் புகாருக்குப் பொறுப்பாகப் பதில் சொல்லாமல், அவரைப் பற்றி தேவையற்ற தகவல்களைப் பொதுவெளியில் சொல்லி, அவர் சொன்ன குற்றச்சாட்டுகளுக்கு மதிப்பே இல்லை என்று காட்ட முயன்றிருக்கிறார் அந்த அதிகாரி. தன்னுடைய படை வீரரையே அனைவருக்கும் முன்னால் “மனநிலை சரியில்லாதவர், குடிகாரர், வேலைக்கு லாயக்கற்றவர்” என்றெல்லாம் எப்படி ஒரு அதிகாரியால் மட்டம்தட்ட முடிகிறது? இப்படி கொப்புளம் தெரிவது (வீடியோ வெளி யாவது) இது முதல் முறையல்ல.

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளின் திடீர் தாக்குதலால் படுகாயமடைந்து ரத்தம் சொட்டச்சொட்டத் துடிக்கும் 3 மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் (அதில் ஒருவர் அதிகாரி, ஒருவர் துணை கமாண்டண்ட்) “உதவி, உதவி” என்று கதறுவது வீடியோவாக வெளியானது. ஆனால் இந்திய ஊடகங்கள் தேசப்பற்று காரண மாக அதைப் பெரிதாக்கவில்லை. இவை எரிச்சலூட்டும் பருக்கள் போன்றவை என்பதால் மறைக்கப்பட்டன. எல்லையில் பதற்றம் நிலவும் போது பாகிஸ்தானியப் பிரச்சார இயந்திரம் இவற்றை ஒளிபரப்புகின்றன. இந்திய எல்லையைக் காவல் காக்கும் இந்திய ஆயுதப் படைகளின் மனவுறுதியைக் குலைக்க இப்படிச் செய்கின்றன. (எந்த நாட்டுக்காக நீங்கள் ஆயுதம் எடுத்துப் போராடுகிறீர்களோ அங்கே உங்களைக் கவனிக்க யாருமில்லை, ஏன் உயிரை விடுகிறீர்கள் என்று மறைமுகமாக அவர்கள் தூண்டிவிடுகிறார்கள்.)

தீவிரவாதிகளுக்கு எதிராகப் போரிடும் வீரர் களுக்கு உதவ மருத்துவ வசதிகளோ, டாக்டர்களோ அருகில் இல்லை என்பதே நம் நாட்டுக்குப் பெருத்த தருமசங்கடத்தைத் தரக்கூடிய உண்மை. சமீப ஆண்டுகளில், ராணுவத்தினரைப் போலவே களத்தில் போரிடும் மத்திய ஆயுதப் படை வீரர் களின் உயிரிழப்பு எண்ணிக்கை, ராணுவத்தில் இறப்பவர்களைவிட இரண்டு மடங்காகியிருக்கிறது. ராணுவத்தினருக்குக் கள மருத்துவமனைகளும் முன்கூட்டியே சில அவசர சிகிச்சைகளை அளிக்கும் மருத்துவப் பிரிவுகளும் படைகளுடனேயே இருக் கின்றன. மத்திய ஆயுதப் படை வீரர்களுக்கு அப்படி ஏதும் கிடையாது.

சத்தீஸ்கரில் நக்சல்களால் சுற்றி வளைக்கப் பட்டு கடுமையாக தாக்கப்பட்ட மத்திய ஆயுதப் படை வீரர்களைக் காப்பாற்ற வந்த விமானப் படை ஹெலிகாப்டர்கள், “துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து கொண்டேயிருப்பதால் தரையிறங்க முடியாது, மீட்புக் குழுவினர் உட்பட அனைவருமே உயிரிழக்க நேரும்” என்று கூறிவிட்டு விலகிச் சென்றது. சிக்கியவர்கள் விமானப்படை வீரர் களாக இருந்தால் ஹெலிகாப்டர் அப்படிப் போயிருக் குமா என்ற கேள்வியும் மத்திய ஆயுதப் படை யினர் மத்தியில் அப்போது எழுந்தது. மத்திய ஆயுதப் படைகளுக்குத் தலைவர்களாக, தலைமை தளபதிகளாக நியமிக்கப்படுகிறவர்கள் பெரும்பா லும் ஐ.பி.எஸ். அதிகாரிகள். அவர்கள் தலைமை யகத்தில் உட்கார்ந்து கொண்டு திட்டமிடுவது, உத்தரவிடுவதோடு சரி. (ஒரு சிலர் மட்டுமே களத்தில் நின்று தலைமை தாங்குகின்றனர்.)

மத்திய ஆயுதப் போலீஸ் படையினரின் வேதனையும் விரக்தியும் உச்சத்துக்கு சென்று விட்டது. கடந்த பத்தாண்டுகளாகவே மத்திய ஆயுதப் படைப் பிரிவினரை ஓரிடத்திலிருந்து இன் னொரு இடத்துக்கு நகர்த்திக் கொண்டே இருக் கிறார்கள். லாரிகளின் பின் பகுதியிலோ, சரக்கு விமானங்களின் பின்னாலேயோ உட்கார வைத்து காடு மாற்றி காடு அழைத்துச் செல்கிறார்கள். சி.ஆர்.பி. என்ற ஆங்கில முதலெழுத்துகளை அவர்கள் “சல்தே ரகோ பியாரே” (போய்க் கொண்டே இரு) என்று சொல்லிக் கொள்கிறார்கள். இந்த வார்த்தைகளைக் கொண்டு ஒரு பாட்டைக்கூட இயற்றிவிட்டார்கள். காஷ்மீரில் பணிபுரியும் போதா வது ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் பாதுகாப்பு இருப்பதால் இவர்கள் மீது சற்று மரி யாதை காட்டப்படுகிறது. பிற இடங்களில் இரண்டாம் தரக் குடிமகனாகத் தான் நடத்தப்படுகின்றனர்.

குறைந்த சம்பளம், சுவையில்லாத சாப்பாடு, மரியாதைக் குறைவு, குறைந்த ஓய்வூதியம் என்பதே இவர்களுடைய அடையாளம். ராணுவத்திலாவது ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம் என்பதில் தளபதி கள் துணைக்கு நிற்கிறார்கள். ஐ.பி.எஸ். அதிகாரி களுக்கு இவர்கள் மீது அக்கறையோ கரிசனமோ கிடையவே கிடையாது. மத்தியப் படைப் பிரிவினர் தங்களை ‘சல்தே ரகோ பியாரே’ என்று அழைத்துக் கொள்வதைப்போல எல்லை பாது காப்புப் படை (பி.எஸ்.எஃப்) வீரர்களும் தங்களை ‘பிஸ்தாரா சமால் ஃபோர்ஸ்’ என்று அழைத்துக் கொள்கின்றனர். (பெட்டி, படுக்கையுடன் தயாரா கும் படை என்று பொருள்). சாப்பாடு, மருத்துவ உதவி போன்றவை மோசம், முகாம்களும் பாதுகாப்பற்றவை என்று இ.என். ராம்மோகன் தலைமையிலான விசாரணைக் குழு சத்தீஸ்கரில் ஆய்வு நடத்திய பிறகு அறிக்கை அளித்திருக்கிறது.

மத்திய ஆயுதப்படைப் பிரிவின் பல்வேறு பிரிவுகளிலும் ஆயிரக்கணக்கானவர்கள் தொடர்ந்து சேர்க்கப்பட்டு வருகின்றனர். மத்திய ரிசர்வ் போலீஸ் படை, எல்லை பாதுகாப்புப் படை, சசஸ்த்ர சீமா பால், அசாம் ரைஃபிள்ஸ், தேசிய பாதுகாப்புப் படை, இந்திய-திபெத்திய எல்லைப் படை, மத்திய தொழில் பாதுகாப்புப் படை என்று இவற்றின் எண்ணிக்கையும் அதிகம். விமான நிலையங்கள், இன்ஃபோசிஸ் போன்ற தனியார் நிறுவனங்கள் உள்பட பலவற்றையும் பாதுகாக்கும் இவர்களுடைய மொத்த எண்ணிக்கை பத்து லட்சத்துக்கும் மேல். உலகிலேயே நான்காவது பெரிய ராணுவம் இந்தியாவுடையது என்பார்கள்.

இந்தப் படைகளைச் சேர்த்தால் ஐந்தாவது படையும் நம்முடையதுதான் என்று சொல்லத்தக்க அளவில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இப் படைகள் இருக்கின்றன. இவற்றின் எல்லா நிலைகளிலும் சீர்திருத்தம், நவீனமயம், தலைமை தேவைப்படுகின்றன. உள்துறை அமைச்சகத்தின் பொறுப்பில் மட்டும் விட முடியாதபடிக்கு அளவி லும் முக்கியத்துவத்திலும் இவை பெரியன. இவற்றின் நலம், பாதுகாப்பு, பயிற்சி போன்ற வற்றுக்கு புதிய தலைமை அவசியம். ராஜீவ் காந்தி காலத்தில் இவற்றுக்கென்றே தனி துணை நிலை அமைச்சர் இருந்தார்.

வாஜ்பாய் காலத்தில் அது முடிவுக்கு வந்தது. ப.சிதம்பரம் பதவி வகித்த காலத்தைத் தவிர்த்துப் பார்த்தால் உள்துறை அமைச்சகத்துக்கு கோமாளிகளே நியமிக்கப்படுகிறார்கள். நம்முடைய உடல் முழுக்க கொப்புளங்கள் (களங்கம்) வராமல் இருக்க வேண்டும் என்றால் உள்துறை அமைச்சகத்துக்குப் பொருத்தமானவரை நியமிப்பதிலிருந்து தொடங்க வேண்டும்.

- சேகர் குப்தா, மூத்த பத்திரிகையாளர்,

இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னாள் முதன்மை ஆசிரியர், இந்தியா டுடே முன்னாள் துணைத் தலைவர். தொடர்புக்கு: shekhargupta653@gmail.com

தமிழில் சுருக்கமாக: ஜூரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x