

டெல்லியில் நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக கூறிய காங்கிரஸ், சில மணி நேரங்களில் தனது முடிவை மாற்றி அறிவித்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
டெல்லியில் தொங்கு சட்டமன்றம் என்ற நிலையால், அங்குள்ள அரசியல் சூழலில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.
இந்த நிலையில், டெல்லிக்கான காங்கிரஸ் பொறுப்பாளரும், அக்கட்சியின் பொதுச் செயலருமான ஷகீல் கமது இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, "ஆம் ஆத்மி ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு தர வேண்டும் என்று காங்கிரஸின் மூத்த தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர். வெளியில் இருந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்பது அவர்களது விருப்பம்.
ஆனால், டெல்லி எம்.எல்.ஏ.க்களுடன் இது பற்றி பேச வேண்டும். அவர்களது கருத்துகள் மிகவும் முக்கியம். அவர்களது கருத்துகளைக் கேட்டறிந்த பின்னர் மீண்டும் இது பற்றி பேசுவோம்" என்றார்.
இதையடுத்து, டெல்லியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் 8 பேருடன் ஷகீல் அகமது ஆலோசனை நடத்தினார். அப்போது, கட்சியின் முடிவுக்கு கட்டுப்படுவதாக அனைவரும் அவரிடம் தெரிவித்தனர்.
ஆனால், பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ராஜ் பாப்பர், "இரண்டு கட்சிகள் ஆட்சிகள் வரவேண்டும் என்று விரும்பிதான் டெல்லி மக்கள் வாக்களித்தனர். எனவே, அவர்கள் (பாஜக, ஆம் ஆத்மி) அரசு அமைத்து, தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றட்டும்" என்றார்.
ஆம் ஆத்மிக்கு ஆதரவு என்று கூறிவிட்டு, சில மணி நேரங்களில் இப்படி தலைகீழாக முடிவை மாற்றியிருப்பது, டெல்லியில் காங்கிரஸ் வட்டாரத்துக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியது.
முன்னதாக, காங்கிரஸோ அல்லது பாஜகவுக்கோ ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்க மாட்டோம் என்று ஆம் ஆத்மி திட்டவட்டமாகத் தெரிவித்து குறிப்பிடத்தக்கது.