Published : 15 Nov 2013 12:00 AM
Last Updated : 15 Nov 2013 12:00 AM

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்: ஷீலா தீட்சித் வேட்பு மனு தாக்கல்

டெல்லி சட்டப்பேரவைக்கு நடக்கவுள்ள தேர்தலில் போட்டியிடுவதற்காக முதல்வர் ஷீலா தீட்சித், பாஜக சார்பில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஹர்ஷ் வர்தன் ஆகியோர் வியாழக்கிழமை வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர்.

டெல்லி சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து ஷீலா தீட்சித் போட்டியிடுகிறார். மனு தாக்கல் செய்துவிட்டு நிருபர்களிடம் பேசிய அவர் நான்காவது முறையாகவும் தொடர்ந்து ஆட்சியை காங்கிரஸ் தக்க வைக்கும் என்றார்.

தனது மகனும் எம்பியுமான சந்தீப் தீட்சித், மகள் லதிகா உள்ளிட்டோருடன் வந்த ஷீலா தீட்சித் (75) ஜாம்நகர் ஹவுஸ் சென்று தேர்தல் அலுவலர் சஞ்சீவ் குப்தாவிடம் மனுவை தாக்கல் செய்தார்.

ஷாஜஹான் சாலையில் உள்ள துணை ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள அந்த அலுவலகத்தின் எதிரே திரண்ட கட்சித் தொண்டர்கள் ஷீலாவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் ஆதரவாக கோஷம் எழுப்பினர்.

முதல்வர் ஷீலா போட்டியிடும் தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. இந்த தொகுதியில் பாஜக சார்பில் அதன் முன்னாள் தலைவர் விஜயேந்தர் குப்தா, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோர் முக்கிய போட்டியாளர்கள்.

1998ம் ஆண்டிலிருந்தே டெல்லி பேரவைத் தொகுதி உறுப்பினராக இருந்து வருகிறார் ஷீலா.

பாஜக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஹர்ஷ் வர்தன் கிருஷ்ணா நகர் தொகுதியில் போட்டியிட தனது மனுவை தாக்கல் செய்தார். கிழக்கு டெல்லியில் உள்ள துணை ஆணையர் அலுவல கத்தில் தேர்தல் அதிகாரியிடம் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதன் பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த வர்தன், இந்த தேர்தலில் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையேதான் பிரதான போட்டி இருக்கும். ஆம் ஆத்மி கட்சியானது பெரிய அளவில் போட்டிபோடக் கூடியதாக இருக்காது என்றார்.

பாஜகவில் உட்பூசல் இல்லை என்றும் காங்கிரஸை வீழ்த்த கட்சித்தலைவர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்படுகின்றனர் என்றும் வர்தன் கூறினார்.

மாநில சுகாதாரத்துறை அமைச்சரும் மாநில காங்கிரஸ் மூத்த தலைவருமான ஏ.கே.வாலியா. கீதா காலனியில் உள்ள துணை ஆணையர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

நவம்பர் 9-ம் தேதி பேரவைத் தேர்தலுக்கான நடைமுறைகள் தொடங்கின. புதன்கிழமை வரையில் மொத்தம் 89 பேர் மனு செய்தனர். மனு தாக்கலுக்கு நவம்பர் 16 கடைசி தேதி ஆகும்.

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு டிசம்பர் 4-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x