Published : 22 May 2017 05:26 PM
Last Updated : 22 May 2017 05:26 PM

பாஜகவில் இணைய ரஜினிகாந்தை வரவேற்கிறோம்; அவருக்கு உரிய இடம் வைத்திருக்கிறோம்: நிதின் கட்கரி

நடிகர் ரஜினிகாந்த் பாஜகவில் இணைய வரவேற்கிறோம், அவருக்கு உரிய இடம் வைத்திருக்கிறோம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனியார் தொலைக்காட்சியின் பிரத்யேக பேட்டியில் நிதின் கட்கரி கூறியிருப்பதாவது:

ரஜினிகாந்துடன் எனக்கு நல்ல உறவுகள் உள்ளது. சென்னைக்குச் செல்லும் போதெல்லாம் அவரைச் சந்திப்பேன். கடந்த முறை நாங்கள் அரசியல் பற்றி விவாதித்தோம். அப்போது அவர் அரசியல் தனக்கு ஒத்துவராது என்றார். எனினும் அவர் பாஜகவில் இணைந்தால், அவரை வரவேற்று அவருக்கு உரிய இடத்தை வைத்திருக்கிறோம் என்பதைக் கூறிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.

இவையெல்லாம் முக்கியமான அரசியல் கேள்விகள். இது குறித்து கூற எனக்கு அதிகாரமும் இல்லை நான் முடிவு எடுக்கும் நிலையிலும் இல்லை. கட்சித் தலைவர் மற்றும் கட்சியின் நாடாளுமன்ற குழு முடிவெடுக்கும்.

அவருக்கு (ரஜினிக்கு) மக்களிடையே செல்வாக்கு உள்ளது. சென்னையில் அவரை ஒருமுறை இல்லத்தில் சந்தித்த போது நடந்த சம்பவம் ஒன்று நினைவில் உள்ளது. நான் அவரைச் சந்திக்க பொறியாளர் ஒருவரை உடன் அழைத்துச் சென்றேன். ரஜினிகாந்த் அவருக்கு கைகொடுத்தார். அடுத்த 3 நாட்களுக்கு அந்த பொறியாளர் கையை மடக்கியபடிதான் இருந்தார். ரஜினி ஒரு மகத்தான மனிதர், அவருக்கு நல்ல ஆதரவும் உள்ளது. அவர் கோலாப்பூரைச் சேர்ந்த மராத்தி, அவர் வீட்டு நுழைவாயிலில் சத்ரபதி சிவாஜியின் பெரிய புகைப்படம் உள்ளது.

நான் அவருடன் தனிப்பட்ட முறையில் உரையாடிய போதெல்லாம் அவர் அரசியலுக்கு வர இதுவே தருணம் என்று வலியுறுத்தியுள்ளேன்.

நான் ரஜினிகாந்தின் நலம் விரும்பி. இப்போதைக்கு அவரைச் சந்திக்கும் திட்டம் இல்லை என்றாலும், அவர் எப்போது தயாரானாலும் பாஜக-வில் அவரை வரவேற்கிறோம். பாஜக அவரை இருகரம் கொண்டு வரவேற்கும்.

இவ்வாறு கூறினார் நிதின் கட்கரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x