

பாலியல் புகாரில் சிக்கியுள்ள தெஹல்கா முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் முன் ஜாமீன் மனுவை பனாஜி செஷன்ஸ் நீதிமன்றம் நிராகரித்தது. இதனால் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.
கோவா நட்சத்திர ஓட்டலில் நவம்பர் 7, 8-ம் தேதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தருண் தேஜ்பால், தன்னுடன் பணியாற்றிய சக பெண் நிருபரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக கோவா மாநில போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில், தேஜ்பாலின் வழக்கறிஞர்கள் கடந்த வெள்ளிக்கிழமை காலை கோவாவுக்கு சென்று பனாஜி மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை கைது வாரன்ட் பிறப்பித்த நீதிபதி அனுஜா பிரபுதேசாய் விசாரித்தார்.
நேற்று நீதிமன்றத்தில் வாதிட்ட தருண் தேஜ்பால் வழக்கறிஞர், பாஜக தலைவர்களின் ஊழல் விவகாரங்களை தருண் தேஜ்பால் அம்பலப்படுத்தியுள்ளார். அதற்குப் பழிவாங்கும் வகையிலேயே கோவா மாநில பாஜக அரசு சார்பில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார்.
இன்று இரண்டாவது நாளாக முன் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்றது. விசாரணையின் போது, தேஜ்பால் கோர்ட்டில் இருந்தார். பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை முடியும் வரை தேஜ்பால் கோவாவிலேயே இருப்பார். பாதிக்கப்பட்ட பெண் வசிக்கும் மும்பைக்கு வழக்கு முடியும் வரை செல்ல மாட்டார். எனவே சாட்சியங்களை தேஜ்பால் கலைத்து விடுவார் என அஞ்சத் தேவையில்லை. அதே போல் தேஜ்பால் வெளிநாட்டுக்கும் செல்ல மாட்டார். ஏனென்றால், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் முன்னர் அவர் வெளிநாட்டுக்குச் செல்ல முயற்சிக்கவில்லை, என வாதிட்டார்.
முன்னதாக தருண் தேஜ்பால் சிபி-சிஐடி போலீசாரை சந்தித்து விசாரணைக்கு தான் முழு ஒத்துழைப்பு அளிப்பேன் எனவும் தெரிவித்திருந்தார். தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு மேலாக தருண் தேஜ்பால் மனு மீது இரு தரப்பு வாதங்களும் நடைபெற்றன. வாதங்களை கேட்ட நீதிபதி தீர்ப்பு மாலை 4.30 மணிக்கு வழங்கப்படும் என தெரிவித்து தள்ளிவைத்தார்.
ஆனால் மூன்று மணிநேரங்களுக்கு மேல் எடுத்துக்கொண்ட நீதிபதி, இரவு 8 மணி அளவில், தனது தீர்ப்பை வழங்கினார். தீர்ப்பு வழங்கும்போது, தேஜ்பால் நீதிமன்றத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.