அசைவ உணவு இல்லாததால் பிரச்சினை செய்த மணமகன்: திருமணத்தை நிறுத்திய மணப்பெண்

அசைவ உணவு இல்லாததால் பிரச்சினை செய்த மணமகன்: திருமணத்தை நிறுத்திய மணப்பெண்
Updated on
1 min read

பெண் வீட்டார் அசைவ உணவை வழங்காததால் ஏற்பட்ட பிரச்சினையில், மீரட்டின் முஸாஃபர் நகர் கிராமத்தில் நடைபெற இருந்த திருமணம் பாதியில் நிறுத்தப்பட்டது.

இதுகுறித்துத் திருமணப் பெண் நக்மா வீட்டார் போபா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதில் மாப்பிள்ளையான ரிஸ்வான் வீட்டாரிடம் மாட்டிறைச்சி கிடைக்காததால், அசைவ உணவு வழங்க முடியவில்லை என்று கூறியதாகவும், அதைக் கேட்டு ரிஸ்வான் கோபமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் தனது நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் சைவ உணவு மட்டுமே வழங்கப்பட்டதைக் கண்டு ரிஸ்வான் வெறுப்படைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிடைக்காத மாட்டிறைச்சி

திருமணத்தின் போது பிரியாணி, கோர்மா, கபாப் ஆகிய அசைவ உணவுகள் வழங்கப்படும் என்று பெண் வீட்டார் உறுதி கூறியதாக ரிஸ்வான் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் நக்மாவின் தந்தை அளித்த புகார் கடிதத்தில், ''ரிஸ்வான் குடும்பத்தினர் அசைவ உணவை வழங்க வேண்டும் என்று கூறித் தொடர்ந்து வற்புறுத்தினர். மாட்டிறைச்சி தற்போது கிடைப்பதில்லை என்பதால், அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என்று கூறினேன்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரதட்சணையில் பெரிதான விரிசல்

நக்மா குடும்பத்தார் வரதட்சணையாய் அளிப்பதாய்ச் சொன்ன மோட்டார் சைக்கிள் என்னவானது என்று ரிஸ்வானின் நண்பர் கேட்க, இரு புறமும் விரிசல் வெடித்துள்ளது. கிராம பஞ்சாயத்து கூட்டப்பட்டு, அவர்கள் பிரச்சினையைத் தீர்க்க முயன்றபோது நக்மா திருமணத்தையே நிறுத்திவிட்டார்.

ஆச்சரிய திருப்பம்

எதிர்பாராத திருப்பமாக அதே ஊரைச் சேர்ந்த ஆசிஃப் என்பவர், அசைவ உணவு, வரதட்சணை எதுவும் இல்லாமல் நக்மாவைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறியுள்ளார். நக்மாவும் திருமணத்துக்குச் சம்மதித்துவிட்டார்.

போபா காவல் நிலைய ஆய்வாளர் பிரகாஷ் இது குறித்துக் கூறும்போது, ''நக்மாவின் தந்தை முறையான புகாரைப் பதிவு செய்துள்ளார். ஆனால் இப்போது பிரச்சினை கிராம பஞ்சாயத்தால் முடிவுக்கு வந்துவிட்டது'' என்றார்.

உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அரசு பதவியேற்ற பிறகு, மாட்டிறைச்சி தடை செய்யப்பட்டு, முறையில்லாமல் இயங்கி வந்த சுமார் 90 சதவீத கசாப்புக் கடைகள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in