

இந்தியாவில் வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் வெப்ப அலையால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க முடியும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2015-ம் ஆண்டில் கோடை வெயில் காரணமாக இந்தியாவில் சுமார் 2,500 பேர் பலியாயினர். ஆந்திராவில் மட்டும் 1,700 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து ஆய்வு செய்த விஞ்ஞானிகள், இந்த பிராந்தியத்தில் இதுவரை 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை தீவிர வெப்ப அலை வீசி வந்த நிலையில், இனி 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை கடும் வெப்பம் நிலவும் என தெரிவித்துள்ளனர்.
கடந்த 1901-ம் ஆண்டு முதல் வெப்பநிலை அளவு பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதன்படி, இதுவரையில் இல்லாத வகையில் கடந்த 2016-ம் ஆண்டு கடும் வெப்பம் நிலவியது தெரியவந்துள்ளது. இதுபோல இந்த ஆண்டும் 9 மாநிலங்களில் மார்ச் மாத இறுதியிலிருந்து கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது.
அமெரிக்காவால் பின்னடைவு
இந்நிலையில், வெப்பநிலை உயர்வைக் கட்டுப்படுத்துவது தொடர்பான பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். இது வெப்ப நிலையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற முயற்சிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
இதுகுறித்து நாட்டின் முதல் பொது சுகாதார பல்கலைக்கழகமான, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பப்ளிக் ஹெல்த் (குஜராத்) இயக்குநர் திலீப் மவலங்கர் கூறும்போது, “பருவநிலை மாற்றம் காரணமாக வெப்பநிலை மேலும் அதிகரிக்கும். இதனால் ஏற்படும் வெப்ப அலைகளால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். இந்த வெப்ப அலைகள் ஆயிரக் கணக்கானோரைக் கொல்லும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாக இருந்தாலும், இதுபோன்ற உயிரிழப்பை தடுக்க முடியும். குறிப்பாக, கடும் வெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்வது பற்றி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம். கடந்த 2014-ல் அகமதாபாத் நகராட்சி சார்பில் இது தொடர்பாக ஒரு செயல் திட்டம் வகுக்கப்பட்டது. இதை மற்ற மாநிலங்களும் பின்பற்றலாம்” என்றார்.