வெப்பம், வெள்ளம், குளிர், மின்னல் மோசமான வானிலை காரணமாக 2016-ம் ஆண்டு 1600 பேர் மரணம்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

வெப்பம், வெள்ளம், குளிர், மின்னல் மோசமான வானிலை காரணமாக 2016-ம் ஆண்டு 1600 பேர் மரணம்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
Updated on
1 min read

‘‘கடுமையான வானிலை காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு 16-க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர்’’ என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியிருப்பதாவது:

கடந்த ஆண்டு கடுமையான வானிலை நிலவியது. இதில் 1600-க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர். இதில் கடும் வெயிலுக்கு 40 சதவீதம் பேர் (700 பேர்) பலியாகி உள்ளனர். தெலங்கானா, ஆந்திராவில் மட்டும் 400 பேர் இறந்துள்ளனர். மற்றவர்கள் வெள்ளம் மற்றும் மின்னல் காரணமாக பலியாகி உள்ளனர்.

முந்தைய ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டு உலகம் முழுவதும் வெப்பம் அதிகமாக இருந்தது. இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பெலாடி என்ற இடத்தில் 51 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. இதற்கு முன்னர் இந்தியாவில் இந்தளவுக்கு வெப்பம் பதிவானதில்லை.

கடும் வானிலையால் மரணம் அடைந்தவர்களில் 35 சதவீதம் பேர் பிஹார், குஜராத், மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இந்த 3 மாநிலங்களில் மட்டும் 552 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

குஜராத்தில் 87, மகாராஷ்டிராவில் 43 பேர் இறந்துள்ளனர். அதேசமயம் குளிருக்கு நாடு முழுவதும் 53 பேர் பலியாகி உள்ளனர். மின்னல் பாய்ந்து பிஹார், ஒடிசா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேச மாநிலங்களில் 415 பேர் இறந்துள்ளனர். மின்னல் பாய்ந்து ஒடிசாவில் மட்டும் 132 பேர் பலியாகி உள்ளனர்.

இந்தியாவில் 2 முறை பருவ மழை பொய்த்த நிலையில், கடந்த முறை பருவ மழை இயல்பாக இருந்தது. எனினும் பல இடங்களில் கடும் மழையால் வெள்ளம் ஏற்பட்டது. வெள்ளத்தால் 475 பேர் பலியாகி உள்ளனர்.

வங்கக் கடலில் ஏற்பட்ட வார்தா புயலால், தமிழகத்தில் 18 பேர் இறந்துள்ளனர்.

இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மைய டைரக்டர் ஜெனரல் கே.ஜே.ரமேஷ் கூறும்போது, ‘‘கடும் வெப்பம் மற்றும் குளிர் குறித்த அவ்வப்போது வானிலை ஆய்வு மையம் மக்களை எச்சரித்து வருகிறது. அதன் மூலம் உயிரிழப்பை குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. உதாரணமாக வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையால், வார்தா புயலில் உயிரிழப்பு கணிசமாக தடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in