

ஹரியாணா மாநிலத்தில் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சரணடைய மறுத்து வரும் சாமியார் ராம்பால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது போலீஸார் தேசத் துரோக வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அவரது ஆசிரமத்திலிருந்து ஒரு குழந்தை, 4 பெண்களின் சடலம் மீட்கப்பட்டுள்ளன.
ராம்பால் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்பதால் மேலும் வன்முறை ஏற்பட்டால் அதைக் கட்டுப் படுத்துவதற்காக துணை ராணுவப் படையைச் சேர்ந்த 500 வீரர்களை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.
இதுகுறித்து ஹரியாணா காவல் துறை தலைவர் எஸ்.என். வஷிஷ்ட் நேற்று சண்டீகரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சாமியார் ராம்பால், அவரது ஆசிரம செய்தித் தொடர்பாளர் ராஜ் கபூர், மற்றொரு முக்கிய நிர்வாகி புருஷோத்தம் தாஸ் உள்ளிட்ட ஆதரவாளர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராம்பால் இன்னமும் ஆசிரமத்துக்குள்தான் இருக்கிறார். போலீஸார் அவரது ஆசிரமத்தை சுற்றி வளைத்து நெருங்கி வருகின்றனர். கடுமையான குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ள அவருடன் பேச்சுவார்த்தை நடத்தும் பேச்சுக்கே இடமில்லை. அவர் தாமாக முன்வந்து சரணடைய வேண்டும். இல்லாவிட்டால் வெள்ளிக் கிழமைக்குள் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவோம்.
ஆசிரம வளாகத்துக்குள் உயிரிழந்த 4 பெண்களின் சடலங்களை அதன் நிர்வாகிகள் போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இவர்களது உடலில் காயம் எதுவும் இல்லை. இந்த சடலங்கள் அனைத்தும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக் கப்பட்டுள்ளன. இந்த அறிக்கையின் அடிப்படையில் இவர்களின் மரணத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும். மேலும் ஒரு பெண், ஒரு குழந்தை உட்பட 2 பேர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தனர்.
270 பேர் கைது
போலீஸாருடன் மோதலில் ஈடுபட்ட தாக ஆசிரம நிர்வாகிகள் 20 பேர் உட்பட 270 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணைக்குப் பிறகு வன்முறையில் ஈடுபட்டவர்கள் சிறையில் அடைக்கப் படுவார்கள்.
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட ராம்பால் ஆதரவாளர்கள் 15 ஆயிரம் பேரை ஆசிரம நிர்வாகிகள் கேடயமாக பிடித்து வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் 10 ஆயிரம் பேர் வெளியேறி உள்ளனர். தங்களை வெளியேறவிடாமல் ஆசிரம நிர்வாகிகள் தடுத்ததாக அவர்கள் கூறியுள்ளனர். மீதம் உள்ள 5 ஆயிரம் பேர் பத்திரமாக வெளியேற நடவடிக்கை எடுக்கப்படும்.
துணை ராணுவப் படை விரைவு
ராம்பாலை கைது செய்யும் விவகாரத்தில் மேலும் வன்முறை வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் துணை ராணுவப் படையை அனுப்ப வேண்டும் என்று மாநில அரசு மத்திய உள் துறை அமைச்சகத்துக்கு கோரிக்கை வைத்திருந்தது.
இதுதவிர, உளவுத் துறையும் ஹரியாணாவில் சட்டம் ஒழுங்கு நிலை மோசமடைய வாய்ப்புள்ளதாக உள் துறை அமைச்சகத்துக்கு ஒரு அறிக்கையை அனுப்பி இருந்தது. இதன் அடிப்படையில், துணை ராணுவப் படையைச் சேர்ந்த 500 பேர் ஹரியாணாவுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படுவார்கள் என உள் துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பின்னணி
ஹிசார் மாவட்டம் பார்வாலாவில் உள்ள ராம்பாலின் ஆசிரமத்தில் கடந்த 2006-ம் ஆண்டு ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக ராம்பால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பல முறை சம்மன் அனுப்பியும் பிடிவாரன்ட் பிறப்பித்தும் ராம்பால் ஆஜராகாததால் அதிருப்தி அடைந்த பஞ்சாப்-ஹரியாணா உயர் நீதிமன்றம், திங்கள்கிழமை மீண்டும் பிடிவாரன்ட் பிறப்பித்தது. வெள்ளிக்கிழமைக்கும் ராம்பாலை ஆஜர்படுத்துமாறு போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, ராம்பாலை கைது செய்வதற்காக அவரது ஆசிரமத் தின் முன்பு நேற்று முன்தினம் நூற்றுக் கணக்கான போலீஸார் குவிக்கப் பட்டனர். அவர்கள் மீது ராம்பா லின் ஆதரவாளர்கள் துப்பாக்கியால் சுட்டதுடன், பெட்ரோல் குண்டு களையும் வீசினர். அதற்கு பதிலடியாக போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தி தடியடி நடத்தினர். இதில் போலீஸார், பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் என 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனால் ஆசிரமம் போர்க்களம் போல் காட்சியளிக்கிறது.