Last Updated : 05 Apr, 2014 12:00 PM

 

Published : 05 Apr 2014 12:00 PM
Last Updated : 05 Apr 2014 12:00 PM

புதுச்சேரி சுண்ணாம்பாறு: உல்லாசப் படகுச் சவாரி

திரைப்படப் பாடல் காட்சிகளில் காட்டப்படும் பளிங்குபோன்ற தண்ணீர், படகுச் சவாரி, மணல் விளையாட்டு இதையெல்லாம் நம்மால் நேரில் காணமுடியுமா என ஏங்குகிறீர்களா? கவலையே வேண்டாம். எல்லாம் நம்மூரிலேயே உள்ளது.

புதுச்சேரியிலுள்ள சுண்ணாம் பாறு படகுத்துறைக்கு வந்தாலே போதும். இவை அனைத்தையும் ஒரே இடத்தில் ரசிக்க முடியும். புதுச்சேரி அரசு சுற்றுலாத் துறையின் கீழ் இயங்கிவரும் இந்தப் படகுத் துறை, புதுவையில் இருந்து கடலூர் செல்லும் சாலையில் 7 கி.மீ. தூரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் உள்ளது. வங்கக் கடலை ஒட்டி சுண்ணாம்பாறு, கடலில் கலக்கும் முகத்துவாரப் பகுதியில் இப்படகுத் துறை அமைக்கப்பட்டுள்ளது.

மூன்றரை கி.மீ. தொலைவுள்ள படகுச் சவாரி ரம்மியமாக இருக்கும். சுற்றிலும் தென்னை மரம் சூழ்ந்த இயற்கைச் சூழலில் பயணிப்பது கடலில் சென்றது போன்ற அனுபவத்தைத் தரும். பயண முடிவில் சுண்ணாம்பாறு அருகேயுள்ள பாரடைஸ் பீச்சில் இறக்கி விடுவார்கள். அது பார்க்கத் தீவு போலவே இருக்கும். பாரடைஸ் பீச்சில் வெளிநாட்டினர் உள்பட பல்வேறு சுற்றுலா பயணிகள் நாள் முழுவதும் தங்கி இளைப்பாறுகின்றனர்.

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் இப்படகுத் துறையில் 40 இருக்கைகள் கொண்ட படகும், 20 இருக்கைகள் கொண்ட படகுகளும் தற்போது இயக்கப்படுகின்றன. சுண்ணாம்பாறு படகுத்துறையில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். இரண்டு இருக்கை படகை பயன்படுத்த ஒருவருக்கு ரூ.30-ம், 4 இருக்கை கொண்ட படகைப் பயன்படுத்த ஒருவருக்கு ரூ.50-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

தற்போது சுண்ணாம்பாறு படகுத்துறையை நவீனப்படுத்த ரூ.5 கோடி செலவில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. புதிய படகுத்தளம், மரங்களால் ஆன உணவகம், கூடுதல் அறைகள், படகுத்துறையை அழகுபடுத்தும் பணிகள் உள்ளிட்டவை செய்யப்பட்டுவருகின்றன. இயற்கை அழகை தரிசிக்க ஆசையிருந்தால் ஒருமுறை விசிட் அடிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x