Published : 28 Dec 2013 01:36 PM
Last Updated : 28 Dec 2013 01:36 PM

ஊழல் அற்ற ஆட்சி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உறுதி

நம்பிக்கை வாக்கெடுப்பு பற்றி கவலை இல்லை. அதில் தோற்றால், மக்கள் எங்களை மெஜாரிட்டியுடன் மீண்டும் ஆட்சியில் அமர்த்துவார்கள் என்று டெல்லி முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள அர்விந்த் கேஜ்ரிவால் குறிப்பிட்டார்.

டெல்லி ராம்லீலா மைதானத்தில் முதல்வராகப் பொறுப்பேற்ற பின், பொதுமக்கள் மத்தியில் கேஜ்ரிவால் பேசியதாவது: இது ஒரு வரலாற்று சிறப்பு மிகுந்த நாள். இன்று பதவி ஏற்றது அர்விந்த் கேஜ்ரிவாலோ, அமைச்சர்களோ அல்ல.

இம் மாநிலத்தின் ஒவ்வொரு குடிமகன்களும் பதவி ஏற்றுள்ளனர். இதுவரை நடந்த அனைத்து போராட்டங்களும், போட்டிகளும் அர்விந்த் கேஜ்ரிவாலை முதல்வராக உயர்த்துவதற்கு அல்ல. ஆட்சியின் கோட்டை கதவுகளை உடைத்து அதன் சாவியை மக்களிடம் கொடுப்பதற்காக நாம் நடத்திய போராட்டம். இதற்காக டெல்லிவாசிகளுக்கு நான் வாழ்த்துக்கள் கூறிக் கொள்கிறேன்.

இது வெறும் ஆரம்பம்தான். இப்போது ஒரு பாமர மனிதனின் அரசு மட்டும்தான் அமைந்துள்ளது. உண்மையான போராட்டம் இன்னும் நிறைய உள்ளது.

இந்தப் போராட்டத்தை நான் ஒருவனாக இந்த 6 அமைச்சர்களுடன் மேற்கொள்ள முடியாது. டெல்லிவாசிகள் ஒன்றரை கோடி பேரும் ஒன்று சேர்ந்தால், இந்த நாட்டின், மாநிலத்தின் ஊழலை ஒழித்துக் கட்டி விடலாம் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு எங்களிடம் உள்ளது என்ற கர்வம் எங்களிடம் இல்லை. அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்துவிட எந்தத மத்திரக்கோலும் நம்மிடம் இல்லை. ஆனால், டெல்லியின் ஒன்றரை கோடி மக்களும் ஒன்றுபட்டால் தீர்க்க முடியாத பிரச்சினை என்று எதுவும் இல்லை என்பது எனது கருத்து.

இந்த 6 அமைச்சர்களோ, அதிகரிகளோ, காவல் துறையினரோ இந்த அரசை நிர்வாகிக்க முடியாது. இந்த ஒன்றரை கோடிவாசிகளும் சேர்ந்து இந்த ஆரசை நிர்வகிக்கும்படியான ஒரு முறையை நாம் இனி அமுல்படுத்துவோம்.

இரண்டரை வருடங்கள் முன்பு, இதே ராம்லீலா மைதானத்தில் நாம் ஒன்று சேர்ந்தோம். இங்கு அண்ணா ஹசாரே 13 நாள் உண்ணாவிரதம் இருந்த போது, நாட்டில் ஊழலை ஒழிக்க வலுவான சட்டம் வேண்டும் என்று தானே கேட்டோம்.

இதற்காக தொடர்ந்து இரண்டு வருடங்கள் போராடியும் பலனில்லை. அரசியலை மாற்றினால் ஒழிய, இந்த நாட்டை திருத்த முடியாது எனப் புரிந்து கொண்டோம்.

இந்த அரசியல் ஒரு சாக்கடை.இதில் நாமும் இறங்கினால் அசுத்தமாகி விடுவோம் என அண்ணாஜி பலமுறை என்னிடம் கூறி வந்தார்.

இதற்கு நான் அவரிடம், இது ஒரு சாக்கடை எனில், அதில் நாமே இறங்கி சுத்தம் செய்ய வேண்டி இருக்கும். அதில் இறங்கி சுத்தப்படுத்தினால் ஒழிய அது சுத்தமாகாது என அன்னாஜியை புரிய வைக்க முயற்சி செய்தேன். ஆனால் பலனில்லை.

இன்று நம் அரசு பள்ளிகளில் கல்வியின் நிலை மோசம், நம் அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் கிடைப்பதில்லை, மின்சாரக் கட்டணம் அதிகமாக வருகிறது, குடீநீர் வருவதில்லை, சாலைகள் உடைந்து காணப்படுகின்றன.

ஏனெனில், அரசியலின் நிலையும் மோசம். இதை சரிசெய்ய நாம் அனைவரும் கிளம்பியுள்ளோம். இந்த பயணத்தில் இன்று ஒரு வரலாற்று சிறப்புமிக்க தினமாகும் என்றார் கேஜ்ரிவால்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x