Last Updated : 21 Aug, 2016 10:35 AM

 

Published : 21 Aug 2016 10:35 AM
Last Updated : 21 Aug 2016 10:35 AM

தடியடியை கண்டித்து பாஜகவினர் 48 மணி நேர தொடர் ஆர்ப்பாட்டம்

ஏபிவிபி அமைப்பினர் மீது போலீஸார் தடியடி நடத்தியதைக் கண்டித்து பெங்களூருவில் பாஜக சார்பில் 48 மணி நேர தொடர் ஆர்ப்பாட்டம் நேற்று தொடங்கியது.

பெங்களூருவில் கடந்த 13-ம் தேதி ‘ஆம்னஸ்டி இன்டர் நேஷனல் இந்தியா’ அமைப்பு நடத்திய கருத்தரங்கில் இந்திய ராணுவத்துக்கு எதிராக கோஷம் எழுந்ததாக கூறப்படுகிறது. இதை கண்டித்து பெங்களூரு வில் உள்ள ஆம்னஸ்டி அலுவலகம் முன் ஏபிவிபி அமைப்பினர் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டக்காரர்கள் கற்களை வீசியதால், போலீஸார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். இதில் 20-க்கும் மேற்பட்ட ஏபிவிபி அமைப்பினர் காயம் அடைந்தனர்.

இந்நிலையில் இந்த தடியடி சம்பவத்தை கண்டித்து பெங்களூருவில் உள்ள அனந்த் ராவ் சதுக்கத்தில் கர்நாடக பாஜகவினர் 48 மணி நேர தொடர் ஆர்ப்பாட்டத்தை நேற்று தொடங்கினர். முன்னாள் துணை முதல்வர் அசோக் தலைமை யில் நடைபெற்ற இந்த ஆர்ப் பாட்டத்தில் பாஜக எம்.பி. மோகன், எம்எல்ஏ அஸ்வந்த் நாராயண் உள்ளிட்டோரும், பாஜக மகளிர் அணியினர், ஏபிவிபி அமைப்பினரும் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் அசோக் பேசும்போது, “இந்த சம்பவத்துக்கு முதல்வர் சித்தராமையா உடனடியாக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். உள்துறை அமைச்சர் பரமேஷ்வர் உடனே தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிடில் பாஜக, ஏபிவிபி அமைப்பினரின் போராட்டம் தொடரும்'' என்றார்.

இந்தப் போராட்டத்தில் ஹூப்பி, மைசூரு, கொப்பள் ஆகிய இடங்களில் இருந்து பாஜக, விஹெச்பி, ஏபிவிபி அமைப்பினர் இன்று பங்கேற்க உள்ளனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x