

அமெரிக்க வர்த்தக அமைச்சர் வில்பர் ராஸிடம் எச்1பி விசா மீதான புதிய உத்தரவுகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து ‘ஆழ்ந்த கவலைகளை’ மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி எழுப்பியுள்ளார்.
அதாவது, அமெரிக்காவில் அதி திறமை வாய்ந்த இந்திய ஐடி ஊழியர்கள் ஆற்றிய பங்களிப்பு குறித்து அருண் ஜேட்லி அவரிடம் பேசியதாக அதிகாரிகள் மட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
அதிபர் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு நடைபெறும் முதல் அமைச்சரவை மட்ட பேச்சுவார்த்தைகளின் போது, எச்1பி விசா விவகாரங்கள், கவலைகள் குறித்து பரிசீலித்து வருவதாகவும் இன்னமும் புதிய விதிமுறைகள், கட்டுப்பாடுகள் மீது எந்த ஒரு தீர்மானமான முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அருண் ஜேட்லியிடம் வில்பர் ராஸ் உறுதியளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய ஐடி ஊழியர்கள் இருநாட்டு வளர்ச்சிக்கும் ஆற்றிய பங்கு மேலும் தொடர வேண்டுமே தவிர அது பிரச்சினைக்குள்ளாகக் கூடாது என்று அருண் ஜேட்லி வலியுறுத்தியதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இருவருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைகளின் பொது வில்பர் ராஸ், அருண் ஜேட்லியிடம், ட்ரம்ப் நிர்வாகம் உயர்தர திறமையாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாகவே விசா விதிமாற்றங்கள் இருக்கும் என்று கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அருண் ஜேட்லி வியாழனன்று வாஷிங்டன் போய்ச்சேர்ந்தார். அங்கு ஐ.எம்.எஃப், உலக வங்கி கூட்டங்களில் கலந்து கொள்கிறார்.
மேலும் வில்பர் ராஸிடம் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு மோடி அரசு மேற்கொண்ட மிகப்பரவலான, தாக்கம் ஏற்படுத்தும் பொருளாதார வளர்ச்சி சீர்த்திருத்தங்கள் பற்றி எடுத்துரைத்துள்ளார். குறிப்பாக சரக்கு மற்றும் சேவை வரி மசோதா வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படும் நிலைக்கு வந்துள்ளதை அவர் தெரிவித்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.