Last Updated : 18 Jan, 2014 12:00 AM

 

Published : 18 Jan 2014 12:00 AM
Last Updated : 18 Jan 2014 12:00 AM

காரைக்கால் வந்தார் புதுவை துணைநிலை ஆளுநர்- முதல்வர் ரங்கசாமியின் வருகைக்குப் போட்டியா?

ஒரே மாநிலத்தில் பொறுப்புகளில் இருந்தாலும் தனித்தனி நிர்வாகம் நடத்திவரும் புதுச்சேரி முதல்வரும், ஆளுநரும் எதைச் செய்தாலும் ஏட்டிக்குப் போட்டிதான்.

அண்மையில் முதல்வர் ரங்கசாமி காரைக்காலுக்கு வந்துசென்றார். அவரைத் தொடர்ந்து தற்போது புதுவை துணைநிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியாவும் காரைக்காலுக்கு வந்து ஒரு சுற்று சுற்றிப் பார்த்துவிட்டுப் போனார்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி காரைக்காலில் பேசும்போது, “மாநிலத்தில் எந்த ஒரு மக்கள் நல்வாழ்வுத் திட்டத்தையும் செயல்படுத்த மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை. அதிகாரிகள் மூலம் முட்டுக்கட்டை போடுகிறது. தற்போது ஆளுநரைக் கொண்டு இடையூறு செய்கிறது” என்று விமர்சித்தார்.

மேலும், காரைக்காலில் மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவ மனை கட்ட தீட்டப்பட்ட வரைவு திட்டத்தை மத்திய அரசு கிடப்பில் போட்டுவைத்திருப்பதாகவும், ஆனால், மருத்துவமனையை கொண்டுவந்தே தீருவோம் எனவும் சூளுரைத்தார்.

இந்தநிலையில், கார்னிவெல் திருவிழாவைத் தொடக்கி வைக்க புதன்கிழமை காரைக்காலுக்கு வந்தார் புதுவை துணைநிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியா.

விழாவைத் தொடக்கி வைத்துவிட்டு இரவு தங்கியவர் வியாழக்கிழமை காலை முதல்வர் ரங்கசாமி பெரிதும் குறைபட்டுக் கொண்ட மருத்துவமனை விவகாரத்தில் தலையிட்டார்.

மருத்துவமனைக்காக தேர்ந்தெ டுக்கப்பட்டுள்ள இடத்தை நேரில் பார்வையிட்டார். அதுபற்றிய அனைத்து விவரங்களையும் ஆட்சியர் முத்தம்மாவிடம் விரிவாகக் கேட்டுத் தெரிந்து கொண்டார். ஆனால், முதல்வரின் கருத்துகளுக்கும் அவரது விமரிசனத்துக்கும் பதில் அளிக்கும் விதமாக எந்த கருத்தையும் தெரிவிக்காமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

அத்துடன், செருமா விலங்கையில் அமைந்துள்ள பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்துக்கும் சென்று பார்வையிட்டவர், வேளாண் கல்லூரியை மத்திய வேளாண் பல்கலைக்கழகமாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்க உள்ளதாக தெரிவித்தார். கார்னிவெல் விழாவை தொடக்கி வைக்க ஆளுநர் வந்தாரா… சரி, அப்படியென்றால் விழாவை முடித்து வைக்க நான் வருகிறேன் என்று ரங்கசாமி சொல்லியிருக்கிறார்.

இப்படி அடிக்கடி இவர்களுக்குள் ஏட்டிக்குப் போட்டி நடக்கும். இந்தப் போட்டியை வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதில் காட்டுங்கள் என காரைக்கால் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x