பாஜக ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு: மணிப்பூர் முதல்வராக பிரேன் சிங் இன்று பதவியேற்பு

பாஜக ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு: மணிப்பூர் முதல்வராக பிரேன் சிங் இன்று பதவியேற்பு
Updated on
1 min read

மணிப்பூரில் பாஜக ஆட்சியமைக்க மாநில ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லா நேற்று அழைப்புவிடுத்தார். அதன்படி அந்த மாநிலத்தின் முதல் பாஜக முதல்வ ராக பிரேன் சிங் இன்று பதவியேற்கிறார்.

மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் காங்கிரஸ் 28, பாஜக 21 இடங்களைக் கைப்பற்றின. நாகாலாந்து மக்கள் முன்னணி 4, தேசிய மக்கள் கட்சி 4, லோக் ஜன சக்தி 1, திரிணமூல் காங்கிரஸ் 1, சுயேச்சை 1 தொகுதியில் வெற்றி பெற்றன.

பெரும்பான்மையை நிரூபிக்க 31 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில் நாகாலாந்து மக்கள் முன்னணி (4), தேசிய மக்கள் கட்சி (4), லோக் ஜன சக்தி (1) ஆகியவை பாஜகவுக்கு ஆதரவு அளித்தன.

மேலும் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ போங்ராம் ரோபின்ந்ரோ, சுயேச்சை எம்எல்ஏ அஸ்கத் உதின், காங்கிரஸ் எம்எல்ஏ ஷியாம் குமார் ஆகியோரும் பாஜகவுக்கு ஆதரவு அளித்தனர். இதன் மூலம் பாஜகவின் பலம் 33 ஆக உயர்ந்தது.

இதைத்தொடர்ந்து பாஜக எம்எல்ஏக்களின் கூட்டம் இம்பாலில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பிரேன் சிங் கட்சியின் சட்டப்பேர வைத் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார்.

உடனடியாக அவர் ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லாவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதை ஏற்றுக் கொண்ட ஆளுநர் ஆட்சியமைக்க வருமாறு நேற்று அழைப்பு விடுத்தார்.

அதன்படி மணிப்பூரின் முதல் பாஜக முதல்வராக பிரேன் சிங் இன்று பதவியேற்கிறார். எல்லைப் பாதுகாப்புப் படை வீரர், பத்திரிகையாளர் என பன்முகங்களைக் கொண்ட அவர், முதலில் ஜனநாயக புரட்சிகர மக்கள் கட்சியில் இணைந்தார். பின்னர் காங்கிரஸில் சேர்ந்து அமைச்ச ரானார். கடந்த ஆண்டு அக்டோபரில் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in