கழிப்பறை கட்ட முன்னுரிமை: மோடி நிலைப்பாடு மீது சிவசேனை கருத்து

கழிப்பறை கட்ட முன்னுரிமை: மோடி நிலைப்பாடு மீது சிவசேனை கருத்து
Updated on
1 min read

ஜெய்ராம் ரமேஷின் கருத்தையே சொன்னதால், கழிப்பறைத் திட்டத்துக்கு மோடியை பிரச்சாரத் தூதராக காங்கிரஸ் நியமிக்க வேண்டும் என்று சிவசேனை கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

'முதலில் கழிப்பறைகளைக் கட்டுவோம். பிறகு கோயில்களை கட்டுவோம்' என்று குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி கூட்டம் ஒன்றில் பேசினார்.

மோடியின் இந்த நிலைப்பாடு தொடர்பாக, பாஜகவுக்கும் சிவசேனைக்கும் காங்கிரஸ் கேள்வி எழுப்பியிருந்தது.

இந்த நிலையில், மோடியைக் குறைகூறும் காங்கிரஸை விமர்சித்து, பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிவசேனை தனது அதிகாரப்பூர்வ பத்திரிகையான 'சாம்னா'வில் தலையங்கம் வெளியிட்டுள்ளது.

'மோடியை பின்பற்றும் பாஜக'

அதில், 'நரேந்திர மோடி எந்த நிலைப்பாட்டை எடுக்கிறார் என்பது அவர் சார்ந்துள்ள பாஜகவுக்கே தெரியாத நிலை உள்ளது. இப்போதைய சூழலில் மோடி வழிநடத்துகிறார், அதை பாஜக பின்பற்றுகிறது.

மோடி தெரிவித்த கருத்தை காங்கிரஸ் விமர்சித்துள்ளது ஆச்சரியமளிக்கிறது. மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ஏற்கெனவே கூறியதைத்தான் மோடி இப்போது கூறியுள்ளார். உண்மையில், அரசின் கழிப்பறைக் கட்டும் திட்டத்தை மக்களிடையே எடுத்துச் செல்வதற்கான பிரச்சாரத் தூதராக மோடியை காங்கிரஸ் நியமிக்க வேண்டும். அதற்காக பாஜகவுக்கு பெரும் தொகையை சன்மானமாக அளிக்க வேண்டும்.

சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள மசூதிகள், மதரஸாக்களை இடித்துவிட்டு பள்ளிகளைக் கட்ட வேண்டும் என்று எப்போது ஜெய்ராம் ரமேஷும், மோடியும் தெரிவிக்கிறார்களோ, அப்போதுதான் அதை உண்மையான மதச்சார்பின்மையாக நாங்கள் எடுத்துக்கொள்வோம்' என்று அந்த தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in