Last Updated : 22 Apr, 2017 05:56 PM

 

Published : 22 Apr 2017 05:56 PM
Last Updated : 22 Apr 2017 05:56 PM

நிலம், வீடு வாங்க இ.பி.எப். சேமிப்பிலிருந்து 90% தொகையை எடுக்க மத்திய அரசு அனுமதி

நிலம், வீடு வாங்க ஊழியர் வருங்கால வைப்பு நிதியிலிருந்து (இபிஎப்) 90% தொகையை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்த மத்திய அரசின் புதிய விதிமுறைகள் குறித்த அறிவிக்கையில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள் தங்கள் இ.பி.எப். சேமிப்பிலிருந்து ஒருமுறை பணம் எடுத்து ஃபிளாட் வாங்குவதற்காகவோ அல்லது நிலத்தில் வீடு கட்டவோ தவணைத் தொகை செலுத்தப் பயன்படுத்தலாம்.

இருப்பினும் நீங்கள் வீட்டுமனை அல்லது வீடு வாங்கும் திட்டத்தில் ஒரு கூட்டுறவு சங்கம் மூலம் வாங்க முடிவு செய்வதோடு அதே கூட்டுறவு சங்கத்தில் உங்களுடன் இபிஎப் கணக்கு வைத்திருக்கும் குறைந்தது 9 பேர் உடன் இணைய வேண்டும். எந்த ஒரு சட்டத்தின் கீழும் இந்த கூட்டுறவு சங்கம் பதிவு செய்யப்பட்டிருப்பது அவசியம் என்று ஏப்ரல் 12-ம் தேதி மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சக வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய தொழிலாளர் அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குக் கூறும்போது, “2022-ல் அனைவருக்கும் வீடு என்ற பிரதமரின் கனவுத்திட்டத்தின் முதல்படியாகும். இதன் மூலம் 4 கோடி இபிஎப் உறுப்பினர்கள் பயனடைவர். இவர்கள் தங்களாகவே ஒரு கூட்டுறவு சங்கம் தொடங்கி தங்கள் சேமிப்பிலிருந்தே வீடு வாங்கவோ, கட்டவோ செய்ய முடியும்” என்றார்.

முன்னதாக 5 ஆண்டுகள் பணி நிறைவு செய்த ஊழியர்கள் தங்களது 36 மாத சம்பளத்துக்கு (பேசிக் மற்றும் டிஏ சேர்ந்த தொகை) இணையாக பி.எப். சேமிப்பிலிருந்து பணத்தை எடுக்க அனுமதிக்கப்பட்டிருந்தது.

“இபிஎப் திட்டத்தில் குறைந்தது 3 ஆண்டுகள் சேமிப்பு செய்து வந்த உறுப்பினர்கள் வீடு வாங்க, மனை வங்க 90% தொகையினை எடுத்துக் கொள்ளலாம். 90% பணம் எடுக்க முடிவதோடு கடன் தொகையை முழுதுமோ, பகுதியளவிலோ செலுத்துவதற்காக தங்கள் மாதாந்திர பிஎப் தொகையை பயன்படுத்தும் விருப்பத் தெரிவு அனுமதியும் உள்ளது” ஏப்ரல் 21-ல் வெளியான இபிஎப் தலைமை அலுவலக அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அனைத்து பிராந்திய இபிஎப் அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், மனைகள் வாங்க, வீடு கட்ட, இபிஎப்ஓ அலுவலகம் நேரடியாக தொகையை சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கத்திடமோ, ஹவுசிங் ஏஜென்சியிடமோ, பில்டர்களிடமோ கொடுக்கும், இபிஎப் உறுப்பினர்கள் கையில் தொகை கொடுக்கப் படமாட்டாது.

மேலும் இதற்காக கொடுக்கப்பட்ட பணத்தில் ஏதோ ஒரு காரணத்திற்காக இபிஎப் உறுப்பினர்களுக்கு வீடுகட்டி முடிக்கப்படவில்லையென்றாலோ, குறிப்பிட்ட மனை ஒதுக்கப்படாவிட்டாலோ இபிஎப் சேமிப்பிலிருந்து இதற்காக எடுக்கப்பட்ட தொகை மீண்டும் கணக்கில் 15 நாட்களுக்குள் டெபாசிட் செய்யப்படுவதை உறுப்பினர்கள் உறுதி செய்ய உரிமை பெற்றவர்களாகின்றனர் என்று அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x