

கேஜ்ரிவால் தவறு செய்யவில்லை என்றால் அவர் தானாக முன் வந்து விசாரணைக்கு தயார் என்று தெரிவிக்க வேண்டும் என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறியுள்ளார்.
இதுகுறித்து புதன்கிழமை ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் அன்னா ஹசாரே கூறும்போது, "ரூபாய் 2 கோடி லஞ்சம் வாங்கிய புகாரில் கேஜ்ரிவால் தவறு செய்யவில்லை என்றால், தானாக முன் வந்து விசாரணைக்குத் தயார் என்று அவர் தெரிவிக்க வேண்டும். அதன் பின்னர் கேஜ்ரிவால் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டால் அவர் மீது புகார் கொடுத்த நபர் மீது அவதூறு வழக்கு பதிய வேண்டும்"
மேலும் கேஜ்ரிவால் மீது லஞ்சம் புகார் அளித்துள்ள கபில் மிஸ்ரா கேஜ்ரிவால் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து அன்னா ஹசாரே, "அரவிந்த் கேஜ்ரிவால் மீது சுமந்தப்பட்டுள்ள இந்தப் புகார்கள் என்னை வருத்தமடைய செய்துள்ளன. ஊழலுக்கு எதிரான போராட்டங்களில் கேஜ்ரிவால் எப்போதும் என்னுடன் இருந்தார். ஆனால் தற்போது கேஜ்ரிவால் கட்சியைச் சேர்ந்தவரே அவர் 2 கோடி பெற்றதாக புகார் அளித்துள்ளார்.
ஏன் கபில் மிஸ்ரா கேஜ்ரிவால் லட்சம் பெற்றத்தை முன்பே மக்கள் மத்தியில் தெரிவிக்கவில்லை. அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு கேஜ்ரிவால் மீது லஞ்சப் புகாரை கொடுத்துள்ளார். இது சரிதானா?" என்றார்.
டெல்லி ஆம் ஆத்மி அரசில் தண்ணீர், சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை அமைச்சராக இருந்த கபில் மிஸ்ரா சனிக்கிழமை அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார். கபில் மிஸ்ரா ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்து முதல்வர் கேஜ்ரிவால், சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகள் முன் வைத்தார்.
கேஜ்ரிவாலிடம் சத்யேந்திர ஜெயின் ரூ.2 கோடி கொடுப்பதைப் பார்த்ததகாவும், அதை பார்த்த பிறகுதான் கபில் மிஸ்ரா வெளியேறியதாகவும் இதுகுறித்த விவரங்களை ஆளுநர் அனில் பைஜாலிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் கபில் மிஸ்ரா கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.