

அடுத்த வருடம் வரவிருக்கும் உபி மாநில சட்டப்பேரவை தேர்தலில் இடதுசாரிக் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளனர். இது நேற்று லக்னோவில் கூடிய அக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
உபியின் 404 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அடுத்த வருடம் துவக்கத்தில் தேர்தல் வர உள்ளது. இதற்கான இடதுசாரிகள் ஆலோசனைக் கூட்டம் உபியின் தலைநகரான லக்னோவில் நடைபெற்றது. இதில் சி்பிசி, சிபிஐஎம், பார்வார்டு பிளாக், புரட்சிகர சோஷலிஸ்டு கட்சி மற்றும் சிபிஐஎம்.எல் ஆகிய இடதுசாரிகளின் உபி மாநில தலைவர்கள் கலந்து கொண்டனர். வரும் சட்டப்பேரவை தேர்தலில் இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடுவது என இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ‘தி இந்து’விடம் உபி மாநில சிபிஐ தலைவரான அசோக் மிஸ்ரா கூறுகையில், ‘எங்கள் கூட்டத்தில் உபி மற்றும் நாடு முழுவதுமான அரசியல் மற்றும் பொருளாதார நிலை குறித்து ஆராயப்பட்டது. இந்த தேர்தாஇ முன்னிட்டு பாஜக உபியில் மதக்கலவரத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதை தடுப்பதற்கான முயற்சியில் இங்கு ஆளும் சமாஜ்வாதி கட்சிக்கு தோல்வி ஏற்பட்டுள்ளது. இதனால், எந்த மாநிலக் கட்சிகளுடன் கூட்டு சேராமல் இடதுசாரிகள் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளோம்.’ எனத் தெரிவித்தார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உபி மாநிலத்தில் நடைபெற்று வரும் ஊழல், சட்டம் ஒழுங்கு சீரழிவு மற்றும்
புந்தில்கண்ட் பகுதியில் ஏற்பட்டு வரும் வறட்சி ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டது.