

தேர்தல் பிரச்சாரத்துக்காக வரும் நட்சத்திர பேச்சாளர், வேட்பாளரின் தொகுதியில் அல்லாமல் வேறு பகுதியில் வான்வழிப் பயணம் மேற்கொண்டால் அது வேட் பாளரின் தனிப்பட்ட செலவுக் கணக்கில் வராது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலத்தில் 2013-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் சவுராகட் தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏ அஜய் அர்ஜுன் சிங் வெற்றி பெற்றார். 19,356 வாக்கு கள் வித்தியாசத்தில் பாஜக வேட் பாளர் சாராதேண்டு திவாரியை அஜய் வீழ்த்தி இருந்தார்.
இந்த வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி திவாரி மத்தியப் பிரதேச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதா வது, ‘அஜய் தனது செலவுக் கணக்கை முறையாக தாக்கல் செய்யவில்லை. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, அஜய்க்கு ஆதரவாக சிதி பகுதியில் ஹெலிகாப்டர் மூலம் வந்திறங்கிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ராகுலின் வான்வழிப் பயணத்துக்கான செலவை அஜய் தனது செலவுக் கணக்கில் காட்டாமல் மறைத்துவிட்டார்” என மனுவில் தெரிவித்திருந்தார்.
திவாரியின் மனுவைத் தள்ளுபடி செய்யும்படி உயர் நீதி மன்றத்தில் அஜய் மனு தாக்கல் செய்தார். ஆனால், உயர் நீதி மன்றம் மறுத்துவிட்டது. இதைத் தொடர்ந்து அஜய் உச்ச நீதிமன்றத் தில் முறையீடு செய்தார்.
இவ்வழக்கு நீதிபதிகள் ஜே.செலமேஸ்வர், ஏ.எம்.சப்ரே ஆகியோரடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப் போது நீதிபதிகள், “நட்சத்திர பிரச்சாரகராக ராகுல், கட்சிக்காக பிரச்சாரம் செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். அதுவும் வேட்பாளரின் தொகுதிக்கு வெளியே. போபால் - சிதி இடையே பலமுறை ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டுமே மனுதாரரின் தொகுதிக்கு வெளியே உள்ளன. மத்திய பிரதேச தேர்தலில் நட்சத்திர பேச்சாளராக ராகுல் அவரது கட்சிக்காகவே பிரச்சாரம் செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். மனுதாரரின் தொகுதிக்கு மட்டு மல்ல. 76-சவுராஹட் தொகுதியில் ஹெலிகாப்டரில் பயணம் செய்து பேசியிருந்தால், அது வேட்பாளரின் செலவுக் கணக்கில் வரும். தொகுதிக்கு வெளியில் அந்தப் பயணம் அமைந்திருந்தால் வேட்பாளரின் செலவுக் கணக்கில் வராது” என தீர்ப்பளித்தினர்.
அதேசமயம் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 77-ன்கீழ், அந்த நட்சத்திர பேச்சாளர் தொடர்பான ஒட்டுமொத்த செலவுக்கு விலக்கு அளிக்க முடியாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். அதாவது, நட்சத்திர பேச்சாளரின் வருகைக்காக போடப்பட்ட பந்தல்கள் உள்ளிட்ட செலவுகளுக்கு விலக்கு அளிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.