

கடந்த சனிக்கிழமை மாலை, ஒடிசா மாநிலம் கோபால்பூரில் கரையை கடந்த 'பைலின்' புயலின் கோர தாண்டவத்திற்கு 23 பேர் பலியாகினர், 5 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்ட பயிர்கள் நாசமடைந்தன என்று, பைலின் புயல் மீட்புப் பணிகளுக்கான சிறப்பு ஆணையர் பி.கெ.மஹோபத்ரா தெரிவித்துள்ளார்.
பலியானவர்களில் 6 பேர் கஞ்சம் மாவட்டத்தையும், தலா ஒருவர் புரி, பாலாசூர் மாவட்டத்தையும், தலா இருவர் நயாகர், ஜகதீஸ்சிங்பூர், குர்தா, பட்ரக் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. பெரும்பாலோனோர் மரம் முறிந்து விழுந்தே இறந்துள்ளனர்.
மேலும், 'பைலின்' புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டது கஞ்சம் மாவட்டம் தான். அங்கு லட்சக்கணக்கான குடிசைகள் சேதமடைந்தன. 1.26 கோடி மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
மாநிலம் முழுவதும், லட்சக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்துள்ளாம் பிராதான சாலைகளில் விழுந்து கிடக்கும் மரங்களை, தேசிய பேரிடர் விரைவு படையினர், துரிதமாக பாணியில் ஈடுபட்டு அகற்றி வருகின்றனர். மீட்புப் பணிகளை பார்வையிட்ட அம்மாநில முதல்வர் நவீன் பட்னாயக், போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.