

பதான்கோட் விமானப்படைத் தளத்துக்குள் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்தால் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை தொடருவது குறித்து பல்வேறு வாய்ப்புகளை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாரீசில் கடந்த 30-ம் தேதி நடந்த பருவநிலை மாநாட்டின்போது பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்தித்தார். அப்போது இரு தரப்புக்கும் இடையே நிறுத்தப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்க முடிவு செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில், இந்திய வெளியுறவுத் துறை செயலர் ஜெய்சங்கர் வரும் 14-ம் தேதி இஸ்லாமாபாத் சென்று, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அய்ஜாஸ் அஹமது சவுத்ரியிடம் பேச்சுவார்த்தை நடத்துவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற ஜெய்ஷ்-இ-முஹமது தீவிரவாதிகள், பதான்கோட் விமானப்படைத் தளத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவத்தால் இருதரப்புக்கு இடையிலான விரிவான பேச்சுவார்த்தை நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து பல்வேறு வாய்ப்புகளை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், இந்த பேச்சுவார்த்தை வேறு தேதிக்கு ஒத்தி வைக்கப் படலாம் என்றும் இரு நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் சந்தித்து, தீவிரவாத தாக்குதலால் எழுந்த சூழல் குறித்து விவாதிப்பர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.