Last Updated : 05 Mar, 2015 03:35 PM

 

Published : 05 Mar 2015 03:35 PM
Last Updated : 05 Mar 2015 03:35 PM

பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவை நீக்கியது கேஜ்ரிவால் விசுவாசிகளே

பிரசாந்த் பூஷணும் யோகேந்திர யாதவும் கட்சியிலிருந்து விலக தயாராக இருந்த நிலையில், அவர்களை அர்விந்த் ஆதரவு விசுவாசிகள் வலுக்கட்டாயமாக குழுவிலிருந்து வெளியேற்றியதாக ஆஆக-வின் மூத்த தலைவர் மயாங்க் காந்தி கூறியுள்ளார்.

பிரசாந்த் பூஷண் மற்றும் யோகேந்திர யாதவ் ஆகியோர், கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் கட்சியில் அர்விந்த் கேஜ்ரிவாலின் ஆதிக்கம் மட்டுமே இருப்பதாகவும் கூறி செயற்குழு உறுப்பினர்களுக்கு கூட்டாக கடிதம் எழுதியதன் காரணமாக ஆம் ஆத்மி கட்சியில் பிரச்சினை உண்டானது.

இதனை அடுத்து டெல்லியில் கூடிய அந்தக் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில், பிரசாந்த் பூஷண் மற்றும் யோகேந்திர யாதவ் ஆகியோர் கட்சியின் அரசியல் விவகார குழுவில் இருந்து நீக்கப்படுவதாக அதிரடி அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இடம்பெற்ற 19 தலைவர்களில் ஒருவரான மயாங்க் காந்தி தனது வலைப்பூவில், கூட்டத்தில் நடந்தது பற்றி குறிப்பிட்டுள்ளார். அதில்,"ஆம் ஆத்மி அரசியல் விவகாரக் குழுவிலிருந்து விலக பிரசாந்த் பூஷணும் யோகேந்திர யாதவும் தயாராக இருந்தனர்.

அதற்கு அவர்கள் இரண்டு கோரிக்கைகளை முன் வைத்தனர். ஒன்று, வாக்கெடுப்பு நடத்தி அதன் மூலம் தேர்வு செய்யபடும் உறுப்பினர்களை அரசியல் விவகாரக் குழுவில் இடம்பெற செய்ய வேண்டும். நடத்தப்படும் வாக்கெடுப்பில் இருவரும் கலந்துகொள்ளப் போவதில்லை

மற்றொன்று, அரசியல் விவகார குழுவின் செயல்பாடுகளில் மாற்றம் இருக்கக் கூடாது என்பது தான் அது. இந்த 2 கோரிக்கைகளை அடுத்து கூட்டத்தில் சிறிது நேர இடைவெளி ஏற்பட்டது. மணீஷ் சிசோதியா மற்றும் டெல்லி வட்டாரத்தைச் சேர்ந்த அசிசேஷ் கேத்தன், அசுத்தோஷ், திலீப் பாண்டே உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதன் பின்னர் கூட்டம் மீண்டும் கூடியபோது, பிரசாந்த் பூஷண் மற்றும் யோகேந்திர யாதவ் நீக்குவுது குறித்த தீர்மானத்தை மணீஷ் சிசோடியா கொண்டு வந்தனர். இதனை சஞ்சய் சிங் ஆதரித்தார்.

அவர்களை நீக்கும் அறிவிப்பை பொதுப்படையாக வெளியிடுவதை நான் எதிர்த்தேன். ஏனென்றால், அவர்களே வெளியேற முன் வந்தனர். இந்த நடவடிக்கை உலக அளவில் இருக்கும் ஆம் ஆத்மி ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும் என எடுத்துரைத்தேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

செயற்குழு கூட்டத்தில் பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவை நீக்கும் தீர்மானத்தைக் கொண்டு வந்த மணீஷ் சிசோடியா, டெல்லியின் துணை முதல்வர் ஆவார். அசிசேஷ் கேத்தன், அசுத்தோஷ், திலீப் பாண்டே ஆகியோர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு நெருங்கியவர்கள் ஆவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x