

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள 'சார்க்' உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் ராஜ்நாத் சிங் கலந்துகொள்ள இருக்கிறார். அவரது வருகைக்கு அந்நாட்டில் எதிர்ப்புகள் இருக்கும் நிலையில் சில எதிர்பார்ப்புகளும் நிலவுகின்றன.
'சார்க்' உள்துறை அமைச்சர்கள் மாநாடு, வரும் ஆகஸ்ட் 3 மற்றும் 4-ம் தேதிகளில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ளது. இதில், இந்தியா சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார்.
ராஜ்நாத் சிங்கின் பாகிஸ்தான் வருகையை எதிர்த்து நாடு தழுவிய போராட்டம் நடத்தப்போவதாக ஜமாத் உத் தாவா இயக்கத்தின் தலைவர் ஹபீஸ் சயீத் எச்சரித்துள்ளார்.
இது ஒருபுறம் இருக்க, ராஜ்நாத் பயணத்தின்போது இருநாடுகளுக்கும் இடையேயான உறவு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ராஜ்நாத் சிங்கின் இஸ்லாம்பாத் பயணத்தின்போது பாகிஸ்தானுடன் இருநாட்டு உறவு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை என வெளியுறவு அமைச்சகம் கூறியிருக்கிறது.
இருப்பினும் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் சிலர் 'தி இந்து'-விடம் (ஆங்கில நாளிதழ்) கூறும்போது, "பதன்கோட் தாக்குதல் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பின் குழுவினர் பாகிஸ்தானில் விசாரணை மேற்கொள்வது குறித்து பேசுவதற்கான சாத்தியக் கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன" எனத் தெரிவித்துள்ளது.
இதனால் இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவே கருதப்படுகிறது.
இதேபோல், இஸ்லாமாபாத்தில் உள்ள அரசியல் கொள்கைசார் படிப்புகளுக்கான மையத்தின் தலைவர் நஜாம் ரஃபீக்கும், "நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் அரசு ஹபீஸ் சயீதுக்கு பணிவதில்லை. எனவே இந்தியாவுடன் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமா, வேண்டாமா என்பதை நிர்ணயிக்கும் நிலையில் ஹபீஸ் இப்போது இல்லை.
எனவே, பாகிஸ்தான் தனக்குக் கிடைத்துள்ள இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளும். காஷ்மீர் பிரச்சினை உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளையும் பாகிஸ்தான் எழுப்பும்" என்று கணித்துள்ளார்.