

வரும் 20-ம் தேதி முதல் சேமிப்புக் கணக்கில் இருந்து வாரம் ரூ.50 ஆயிரம் வரை பணம் எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும் மார்ச் 13 முதல் பணம் எடுப்பதற்கான அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
பணமதிப்பு நீக்க நடவடிக்கையை தொடர்ந்து வங்கி சேமிப்புக் கணக்கில் இருந்து வாரம் ரூ.24,000 வரை மட்டுமே பணம் எடுக்கலாம் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதற்கான உச்ச வரம்பை ரிசர்வ் வங்கி நேற்று உயர்த்தி அறிவித்தது. இது குறித்து ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ஆர்.காந்தி கூறும்போது, ‘‘வங்கி சேமிப்புக் கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகளை இரு நிலைகளில் நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வரும் 20-ம் தேதி முதல் வாரம் ரூ.50,000 வரை பணம் எடுக்கலாம். அதன் பின் மார்ச் 13 முதல் இந்த கட்டுப்பாடு முழுமையாக நீக்கப்படுகிறது’’ என்றார்.