ஆந்திர பேரவையில் ரோஜா மன்னிப்பு கேட்பாரா?

ஆந்திர பேரவையில் ரோஜா மன்னிப்பு கேட்பாரா?
Updated on
1 min read

நடிகையும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சட்டப் பேரவை உறுப்பினருமான ரோஜா பேரவையில் மன்னிப்பு கேட்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளதால் அம்மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சித்தூர் மாவட்ட நகரி தொகுதி எம்எல்ஏவும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் மாநில மகளிர் அணி தலைவியுமான நடிகை ரோஜா முதல்வர் சந்திரபாபு நாயுடுவை தீவிரமாக எதிர்த்து வருகிறார். அவரை தரக்குறைவாக விமர்சித்ததால் சட்டப்பேரவையில் இருந்து ஓராண்டுக்கு தற்காலிகமாக இடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடருக்காக ஆந்திராவின் புதிய தலைநகரான அமராவதியில் சட்டப்பேரவை கூடியுள்ளது.

இந்த கூட்டத்தொடரில் ரோஜா பகிரங்கமாக மன்னிப்பு கோரினால் அவர் பேரவைக்கு வர அனுமதிக்கப்படுவார். இல்லாவிட்டால் மீண்டும் ஓராண்டு வரை தற்காலிகமாக இடை நீக்கம் செய்யப்படுவார் என கூறப்படுகிறது.

இதற்கிடையே சபாநாயகரை நேரடியாக சந்தித்து ரோஜா மன்னிப்பு கடிதம் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம் பேரவையில் அவர் நேரடியாக மன்னிப்பு கேட்பாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ரோஜாவின் இந்த முடிவால் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியும் அதிருப்தி அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in