

நவ்பாரத் பவர் தனியார் நிறுவனம் மற்றும் அதன் அதிகாரிகள் தொடர்பான நிலக்கரி சுரங்க முறைகேடு விசாரணையை மேலும் விசாரிக்க சிபிஐ-க்கு சிறப்பு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
விசாரணையை தொடர்ந்து நடத்தி, விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை டிசம்பர் 16-ஆம் தேதி நீதிமன்றத்தில் பதிவு செய்ய சிபிஐ-க்கு நீதிபதி பாரத் பராசர் உத்தரவிட்டுள்ளார்.
நவ்பாரத் பவர் தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஹரிஷ் சந்திர பிரசாத், மற்றும் நிறுவனத் தலைவர் பி.திரிவிக்ரம பிரசாத் ஆகியோர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.
மேலும், அரசு ஊழியரகளுக்கு முறைகேட்டில் தொடர்பில்லை என்று சிபிஐ தனது கூடுதல் இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
ஆனால், நிலக்கரித் துறை செயலர் எச்.சி.குப்தா, மற்றும் இருவர் தவறிழைக்கவில்லை என்பதை உச்ச நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட சிறப்பு அரசு வழக்கறிஞர் ஆர்.எஸ்.சீமா ஏற்க மறுத்தார். இவர்கள் சட்ட விரோதமாக நவ்பாரத் நிறுவனத்திற்கு நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கியதாக அவர் குற்றம்சாட்டினார்.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு பெறும் நிறுவனத்தின் நிகர மதிப்பு மிக முக்கியமானது, அதாவது அதன் நிதி பலம் பற்றிய ஆவணங்கள் அவசியம், ஆனால் நவ்பாரத் தனியார் நிறுவனம் குளோபிலெக் சிங்கப்பூர் நிறுவனம் மற்றும் மகாலஷ்மி குழுமமும் தங்கள் நிறுவனத்திற்கு நிதி ஆதரவு அளிப்பதாக மோசடியாக உரிமை கோரியது என்று சிபிஐ முன்னதாக குற்றம்சாட்டியிருந்தது.