

பொதுத் தேர்தலில் தோற்பவர்கள் எதிர்ப்பதும் அவர்களே வெற்றி பெற்றால் ஆதரிப்பதும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் (இவிஎம்) இருவேறு நிலைகளாக இருந்து வருகிறது.
உத்தரபிரதேசம், பிஹார் உள்ளிட்ட சில மாநிலங்களில், தேர்தலின்போது வாக்குச்சாவடி கள் கைப்பற்றப்படுவதும் வாக்குப் பெட்டிகள் சூறையாடப்படுவதும் அதிக அளவில் நிகழ்ந்து வந்த காலம் அது. இதற்கு முடிவு கட்டும் வகையில், எம்.பி.ஹனீபா என்பவ ரால் 1980-ல் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் கண்டுபிடிக்கப் பட்டது. இது முதன்முறையாக தமிழகத்தின் 6 நகரங்களில் நடந்த அரசு பொருட்காட்சிகளில் காட்சிக்கு வைக்கப்பட்டது. பின்னர் இதுகுறித்து தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
புகழ்பெற்ற மும்பை ஐஐடியின் பேராசிரியர்கள் இடம்பெற்ற குழுவின் மேற்பார்வையில் இந்த இயந்திரம், பாரத் எலக்ட்ரானிக்ஸ் (பெங்களூர்) மற்றும் எலக்ட் ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (ஐதராபாத்) ஆகிய அரசு நிறுவனங்களால் தயாரிக்கப் பட்டது. 1982-ல் கேரளாவின் வடக்கு பேராவூர் தொகுதி இடைத்தேர்த லில் ஐம்பது இயந்திரங்கள் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டன. பிறகு படிப்படியாக பல மாநிலங் களில் பயன்படுத்தப்பட்டன. இதற்கு நல்ல பலன் கிடைத்த தால், 2004 மக்களவைத் தேர்தலில் முதன்முறையாக நாடு முழு வதும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது.
தொடர்ந்து 2 முறை மத்தியில் ஆட்சி செய்த பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயக கூட்டணி, இந்தத் தேர்தலில் தோல்வி அடைந்தது. இதனால் இவிஎம் இயந்திரத்துக்கு பாஜக முதன் முதலாக கடும் எதிர்ப்பு தெரி வித்தது. இத்தனைக்கும் இந்த இயந்திரம் பாஜக ஆட்சியின்போது அங்கீகரிக்கப்பட்டு, தயாரிக்கப் பட்டு செயல்முறைக்கு வந்தது.
அப்போது பாஜக சார்பில் எதிர்ப்பு தெரிவித்தவர் ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் (தற்போது இவர் அக்கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர்). இவர் இவிஎம் இயந்திரங்களுக்கு எதிராக ஒரு நூலையும் எழுத, அதை பாஜக தலைவர் எல்.கே.அத்வானி வெளி யிட்டிருந்தார்.
அடுத்ததாக தமிழகத்தில் நடை பெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் இவிஎம் பயன்படுத்தப்பட்டது. இதில் தோல்வியடைந்த அதிமுக இவிஎம் இயந்திரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. பின்னர் வெற்றிபெற்ற பிறகு அக்கட்சி அமைதியானது.
2004 மற்றும் 2009 மக்க ளவைத் தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்றதால் அமைதியாக இருந்த காங்கிரஸ் கட்சி, தொடர் தோல்வி காரணமாக இப்போது இந்த இயந்திரத்தை எதிர்த்து வருகிறது. மொத்தம் 17 கட்சிகள் இவிஎம் இயந்திரத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
இதேபோல 2007 உ.பி. சட்டப் பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி செய்த மாயாவதி, தொடர்ந்து 2 தேர்தலில் தோற்றதால், முதல் கட்சியாக இயந்திரங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இவரது பாணியில், 2012-ல் உ.பி. யில் ஆட்சி அமைத்தபோது அமைதி யாக இருந்த சமாஜ்வாதி கட்சி, சமீபத்திய தேர்தல் தோல்விக்கு பிறகு போர்கொடி தூக்கி உள்ளது.
மேலும் 2013 மற்றும் 2015-ல் நடந்த டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த ஆம் ஆத்மி ஒருங் கிணைப்பாளர் கேஜ்ரிவால் அப் போது எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், இப்போது பஞ்சாபில் எதிர்பார்த்தபடி வெற்றி கிடைக் காததால் எதிர்க்கத் தொடங்கி உள்ளார்.
இவிஎம் இயந்திரம் மீது வழக்கு
இதனிடையே 2010-ல் வாக்குப்பதிவு இயந்திரத்தின் தொழில்நுட்ப வல்லுநரான ஹரி பிரசாத், டெல்லியில் செய்தியாளர் களை கூட்டி இவிஎம் இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என செய்முறை விளக்கம் அளித்தார். இதற்காக அவர் பயன்படுத்தியது மகராஷ்டிர மாநிலத்தில் இருந்து திருடப்பட்ட வாக்கு இயந்திரம் என தெரியவந்தது. இதையடுத்து பிரசாத் கைது செய்யப்பட்டார்.
பிறகு உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டு அதன் தீர்ப்பு 2013-ல் வெளியானது. இதில், இவிஎம் இயந்திரத்தை மாற்றி அமைக்கலாம் என்பது நிரூபிக்கப்படவில்லை எனக் கூறிய நீதிமன்றம், யாருக்கு வாக்களித் தோம் என்பதை அறியும் ஒப்புகை சீட்டு (விவிபிஏடி) முறையை படிப் படியாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.
தேர்தல் ஆணையம் சவால்
அரசியல் கட்சியினரின் புகாரை யடுத்து, வாக்கு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என்பதை நிரூபிக்குமாறு தேர்தல் ஆணையம் சவால் விடுத்துள்ளது. இதற்கு முன்பும் ஆணையம் பலமுறை இதுபோன்ற சவால் விடுத்துள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் வட்டாரம் ‘தி இந்து’ விடம் கூறும்போது, “ராமேஸ் வரத்தைச் சேர்ந்த ஒருவர் இந்த முயற்சியில் ஏற்கெனவே தோல்வி அடைந்தார். 2010-ல் தேர்தல் ஆணையம் அனைத்து அரசியல் கட்சிகளையும் கூட்டி இவிஎம் இயந்திரம் தொடர்பாக ஆலோ சனை நடத்தியது. இவிஎம் இயந் திரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த கட்சியினர் இக்கூட்டத்தில் பங்கேற் றார்களே தவிர, ஆதரவளித்தவர் கள் வரவில்லை. இவர்கள் இப்போது எதிர்ப்பு பட்டியலில் இணைந்து 2-வது முறையாக இவிஎம் இயந்திரங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
வாக்குச்சீட்டு முறையின் தரம் உயர்த்தப்பட்ட முறையே இவிஎம் இயந்திரம். இதில் இணையதள இணைப்பு அல்லது புதிய சிப்புகள் நுழைக்காதவரை மாற்றி அமைக்க முடியாது. மேலும் இவை தொடர்ந்து எங்களின் பாதுகாப்பில் இருப்பதால் அதை மாற்றி அமைக்க வழியே இல்லை. தேர்தலின் போது நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரி களின் கண்காணிப்பில் இருப்பதா லும் அதில் எந்த மாற்றமும் செய்ய முடியாது” என்றனர்.
இதுபோல் அவ்வப்போது கிளம்பும் எதிர்ப்பை சமாளிக்க, இவிஎம் இயந்திரத்தில் ஒப்புகைச் சீட்டு முறையை புகுத்த ஆணை யம் முடிவு செய்துள்ளது. மொத்தம் உள்ள 15.5 கோடி இயந்திரங் களிலும் இந்த வசதி செய்ய ரூ.3,100 கோடி தேவைப்படுகிறது. இந்த நிதியை ஒதுக்குமாறு மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் கடந்த 2 ஆண்டில் 15-க்கும் மேற்பட்ட நினைவூட்டல் கடிதங்களை எழுதியிருப்பதாக கூறப்படுகிறது.