

உலக பயங்கரவாதி என்று அமெரிக்காவினால் முத்திரைக் குத்தப்பெற்ற சையத் சலாஹுதின் காஷ்மீரி தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாஹிதினின் தலைமைக் கமாண்டர் ஆவார்.
இவர் பற்றி அமெரிக்க அரசுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சலாஹுதின் காஷ்மீர் பிரச்சினைக்கு எந்த ஒரு சுமுகத் தீர்வும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் தீவிரமானவர். இன்னும் அதிகமாக காஷ்மீர் தற்கொலைப் படையினரைத் தயார் செய்யப் போவதாக அச்சுறுத்துபவர், இந்தியப் படைகளுக்கு காஷ்மீர் பள்ளத்தாக்கை ஒரு சுடுகாடாக மாற்றுவதற்கு உறுதி பூண்டவர்” என்று பயங்கரமாகக் கூறப்பட்டுள்ளது.
மொகமது யூசுப் ஷா என்ற பெயர் கொண்ட சலாஹுதின் 1980-களின் இறுதியில் ஹிஸ்புல் அமைப்பின் கமாண்டராகப் பொறுப்பேற்ற பிறகு பெயரை மாற்றிக் கொண்டார். 71 வயதாகும் சலாஹுதின் ஐக்கிய ஜிஹாத் கவுன்சிலின் தலைவராவார். இந்த அமைப்புதான் லஸ்கர், ஜெய்ஷ் இ மொகமது உள்ளிட்ட தீவிரவாத அமைப்பின் பூர்வாங்க தலைமையிடமாகும்.
ஹிஸ்புல் முஜாஹிதின் தீவிரவாதிகள் உள்நாட்டிலிருந்து உருவானவர்கள்தான், இது பல ஆண்டுகளாக தனி காஷ்மீர் அல்லது பாகிஸ்தானுடன் இணைவதற்காக போராட்டங்கள் செய்து வருவதாகும். பதான்கோட் ராணுவ முகாம் மீது நடத்திய தாக்குதலுக்கு சலாஹுதின் வெளிப்படையாகவே பொறுப்பேற்றதும் குறிப்பிடத்தக்கது.
ஹிஸ்புல் அமைப்பில் இணையும் முன் 1987-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் அமிராக்கடல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி தழுவியவர்.
இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை உரக்கப் பேசுபவர் சலாஹுதின். கடந்த ஆண்டு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ளும் முன் 26/11 மும்பை தாக்குதலின் பின்னணியில் மூளையாகச் செயல்பட்ட ஹபீஸ் சயீதுடன் சலாஹுதின் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகின.
ஹபீஸ் சயீதை உலக பயங்கரவாதி என்று அறிவிக்க இந்தியாவின் முயற்சியை ஐநாவில் சீனா தடை செய்து வருகிறது.
சலாஹுதின் தனது சமீபத்திய வீடியோ செய்தியில் (கராச்சியிலிருந்து) ஹிஸ்புல் கமாண்டர் புர்ஹான் வானி கொலை செய்யப்பட்ட முதலாம் ஆண்டு நினைவு போராட்டங்கள் நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அமெரிக்கா ‘உலக பயங்கரவாதி’ என்று முத்திரைக் குத்தினால் விளைவு என்ன?
அமெரிக்காவுக்கு வெளியே தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபடும் அமைப்புகள் தனிநபர்கள் ஆகியோர் பற்றிய பட்டியலை அமெரிக்கா அவ்வப்போது புதுப்பித்து வருகிறது. எந்த ஒரு நபரும் அமெரிக்காவில் உலக பயங்கரவாதி என்றோ ஒரு அமைப்பு பயங்கரவாத அமைப்பு என்றோ முத்திரைக் குத்தப்பட்டால், அந்த அமைப்பு மற்றும் அது சார்ந்த மற்றும் அதனைக் கட்டுப்படுத்தும் தனிநபர்களின் சொத்துக்கள் முடக்கப்படும். அமெரிக்க குடிமக்கள் இத்தகு முத்திரைக் குத்தப்பட்ட நபர்களுடன், அமைப்புடன் எவ்வித நிதிசார்ந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதிலிருந்து உடனடியாகத் தடை செய்யப்படுவார்கள். மற்ற நாடுகளும் இந்த நடவடிக்கையைப் பின்பற்ற வாய்ப்பு கிடைக்கும்.