

பதான்கோட் பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கையில் தேசிய பாதுகாப்பு கமாண்டோக்களை ஈடுபடுத்தியது குறித்து பாதுகாப்பு நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பதான்கோட்டுக்கு அருகே ஆயிரக்கணக்கான ராணுவ வீர்ர்கள் கைவசம் இருக்கும் போது, முதற்கட்ட நடவடிக்கைகளுக்காக டெல்லியிலிருந்து தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோக்களை வரவழைக்கப்பட்டது பெரிய தவறு, மேலும், உடனடி நடவடிக்கைகளில் ராணுவ வீரர்களை ஈடுபடுத்துவதற்குப் பதிலாக, சில என்.எஸ்.ஜி. படையினரை வரவழைத்ததால் கால தாமதம் ஏற்பட்டது என்று ராணுவ மற்றும் பாதுகாப்பு வட்டார நிபுணர்கள் சாடியுள்ளனர்.
இது குறித்து பதான்கோட்டுக்கு அருகே பிரிகேடியராக இருக்கும் வீரர் ஒருவர் கூறும்போது, “அவர்கள் செய்ததை எங்களில் பலரால் நம்பவே முடியவில்லை. அருகிலேயே இரண்டு இன்ஃபாண்ட்ரி பிரிவுகளும், இரண்டு ஆயுதப் படைப்பிரிவுகளும் உள்ளன. வடக்கு ராணுவ தலைமைச் செயலகமும் உள்ளது. இந்தப் படையினர் பயங்கரவாதத்தை முறியடிப்பதற்கென்றே சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள். ஆனால் விமானப்படை தளத்துக்கு என்.எஸ்.ஜி. படையினர் சிலரை வரவழைத்தது காலதாமதத்துக்கே வழிவகை செய்தது” என்றார்.
லெப்டினன்ட் ஜெனரல் பிரகாஷ் கடோச், கூறும்போது, “ஒரு குறிப்பிட்ட இலக்கைத் தாக்க என்.எஸ்.ஜி. கமாண்டோ பயன்படும், ஒட்டுமொத்த பகுதியையும் அதனால் கையாள முடியாது. என்.எஸ்.ஜி.யை அனுப்பியதில் தீங்கொன்றும் இல்லை. ஆனால், திட்டவட்டமான கட்டளைகளும், கட்டுப்பாடும் இருப்பது அவசியம். எல்லையோர காவல் படை, என்.எஸ்.ஜி. ஆகியவற்றை மனம் போன போக்கில் அழைத்து விட முடியாது. இங்கு ஏதேனும் கட்டளைகளும், வழிகாட்டுதலும், கட்டுப்பாடும் இருந்ததா? இதற்கெல்லாம் ராணுவமே சிறந்தது” என்றார் அவர்.
முன்னாள் ராணுவ தளபதி வி.பி.மாலிக், 'தி இந்து' (ஆங்கிலம்) நாளிதழுக்கு தெரிவிக்கும் போது, “என்.எஸ்.ஜி. சரியான தேர்வா என்பது எனக்கு ஐயமாக உள்ளது. அவர்கள் டெல்லியிலிருந்து வந்தனர். மாறாக உள்ளூரை நன்கு அறிந்த படையினரிடமே பொறுப்பை ஒப்படைத்திருக்க வேண்டும்” என்றார்.
ராணுவ சேவையில் இருக்கும் ஒரு அதிகாரி கூறும்போது, “10 சிறப்புப் படைப் பிரிவுகள் கொண்ட ராணுவம், அல்லது குறைந்தது உதாம்பூரில் இருந்து ஒரேயொரு படை பதான்கோட்டுக்கு 2 மணி நேரங்களில் வந்திருக்க முடியும். நாங்கள் இத்தகைய திடீர் தாக்குதல்களை முறியடிக்கவே சிறப்புப் பயிற்சி பெற்றுள்ளோம்.
மாறாக நீங்கள் என்.எஸ்.ஜி. கமாண்டோக்களை அனுப்பினீர்கள். அவர்கள் வெறும் 160 கமாண்டோக்களுடன் 24 சதுர கிலோமீட்டர் பகுதியை அவர்களால் சிறப்பாக பாதுகாக்க முடியும் என்று யார் கூறினார்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.
அதாவது உள்ளூர் ராணுவப்படை இத்தகைய தாக்குதலை எதிர்கொள்ள தயாராகப் பயிற்சியில் இருந்துள்ளது, ஆனால் சமயம் வரும்போது இவர்கள் உள்ளே நுழைய அனுமதிக்கப்படாதது பெரும் தவறு என்று பலரும் கருதுகின்றனர்.
முன்னாள் ராணுவ நடவடிக்கைகள் தலைமை இயக்குநரான லெப்.ஜெனரல் விநோத் பாட்டியா 'தி இந்து' (ஆங்கிலம்) இதழில் கூறும்போது, “பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை எப்படிக் கையாளப்பட வேண்டுமோ அப்படி கையாளப்படவில்லை. உண்மை என்னவெனில் அதிக காலம் எடுத்துக் கொள்ளப்பட்டது. ராணுவம் அழைக்கப்பட்டிருந்தால் அதன் பலத்துக்கு இன்னும் விரைவில் முறியடிக்கப்பட்டிருக்கும்” என்றார்
"இந்திய ராணுவம் பல ஆண்டுகளாக பயங்கரவாத எதிர்ப்புச் சண்டைகளை திறம்பட கையாண்டு வருகிறது. ராணுவத்திடம் ஒப்படைத்திருந்தால் உயிரிழப்புகளும் கூட இருந்திருக்காது. காஷ்மீருக்கு எத்தனை முறை இத்தகைய பயங்கரவாத முறியடிப்பு நடவடிக்கைகளுக்காக என்.எஸ்.ஜி. கமாண்டோக்கள் அனுப்பப்பட்டுள்ளனர்? அங்கு ராணுவம்தான் இதனை திறம்பட முறியடித்து வருகிறது” என்று பணியிலிருக்கும் மற்றொரு ராணுவ அதிகாரி தெரிவித்தார்.
ஏகப்பட்ட பாதுகாப்பு அமைப்புகள் நடவடிக்கையில் ஈடுபட்ட போது யார் இந்த அமைப்புகளுக்கு கட்டளைகளை வழங்கினர்? அதாவது யார் தலைமையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று ஏகப்பட்ட கேள்விகள் எழுந்துள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.