

1984ம் ஆண்டு நிகழ்ந்த சீக்கியர் படுகொலை சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் இதுதொடர்பாக இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று சொல்லும் மத்திய அரசு ஊடகங்களில் ‘இழப்பீடு வழங்கப்படும்' என்று வெளியாகும் செய்திகளை ஏன் மறுக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் கேள்வி எழுப்பி யுள்ளது.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து சீக்கியர்கள் படு கொலை செய்யப்பட்டார்கள். இதில் 3,325 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் தற்போது வரை மத்திய அரசிடமிருந்தும் மற்றும் பல்வேறு அமைப்புகளில் இருந்தும் இழப்பீடு பெற்று வருகின்றனர். இந்நிலையில், இந்தப் படுகொலைச் சம்பவத்தில் உயிரி ழந்தவர்களின் குடும்பங்களுக்குப் புதிய இழப்பீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதன்படி, உயிரிழந்த ஒவ்வொரு வரின் குடும்பத்துக்கும் தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று கூறப்பட்டது.
இதற்கிடையே, டெல்லியில் மூன்று தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்தப்பட இருந்தது. அதனால் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்தன. அப்படி இருக்கையில், மத்திய அரசு இழப்பீடு தொடர்பான தகவலைத் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து தேர்தல் விதிமுறையை மீறிவிட்டதாக தேர்தல் ஆணையம் அக்டோபர் 31ம் தேதி மத்திய அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
தொடர்ந்து நவம்பர் 3ம் தேதி அப்படி ஒரு முடிவு எடுக்கப்படவில்லை என்று மத்திய அரசு பதில் அளித்தது. அடுத்த நாள் டெல்லியில் ஆட்சி கலைக்கப்பட்டு விட்டதால், அங்கு நடைபெறவிருந்த இடைத் தேர்தலும் ரத்து செய்யப்பட்டு விட்டது. இந்நிலையில், இழப்பீடு வழங்க இருப்பதாக மத்திய அரசு கூறியவுடனே நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் செய்திகள் வெளியாயின. மத்திய அரசு 'அப்படி ஒரு முடிவு எடுக்கப்படவில்லை' என்று கூறியுள்ளபோது, ஊடகங்களில் வெளியான செய்திகளை ஏன் அது மறுக்கவில்லை என்று தற்போது தேர்தல் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஆக, இதன் மூலம் அரசு ஏற்கெனவே முடிவு எடுத்துவிட்டது என்றும், அது டெல்லியில் நடைபெறவிருந்த இடைத் தேர்தலுக்கு விதிக்கப்பட்டிருந்த தேர்தல் விதிமுறைகளை மீறுவதாக இருந்தது என்றும், இது தேர்தல் ஆணையகத்துக்கு ‘சந்தேகத்துக்கு இடமற்ற உணர்வை' ஏற்படுத்தியுள்ளது என்றும், எனவே எதிர்காலத்தில் இப்படியான தவறுகள் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசை தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.