

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இது தொடர்பான வழக்கு இன்று தலைமை நீதிபதி ஆர்.கே.அகர்வால், நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிடர் ஜெனரல் பி.வில்சன் பதில் மனு தாக்கல் செய்தார்.
கலை, இலக்கியம், அறிவியல் மட்டுமின்றி பிற துறைகளில் சிறந்து விளங்கும் இந்தியர்களுக்கும் பாரத ரத்னா விருது வழங்கும் வகையில் 1955-ம் ஆண்டின் அறிவிக்கையில் கடந்த 16.11.2011 அன்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையிலேயே அறிவியல் அறிஞர் சி.என்.ஆர்.ராவ் மற்றும் கிரிக்கெட் விளையாட்டில் சிறந்து விளங்கும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோருக்கு பாரத ரத்னா வழங்கலாம் என கடந்த நவம்பர் 15-ம் தேதி குடியரசுத் தலைவருக்கு பிரதமர் பரிந்துரை செய்தார். அதனை ஏற்று மறுநாள் 16-ம் தேதி குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கினார்.
இவர்கள் இருவருக்கும் பாரத ரத்னா விருது வழங்கும் விழா பின்னர் நடைபெறும். அவ்வாறு விருது வழங்குவதற்கு முன்பாக அது தொடர்பான அறிவிக்கையை குடியரசுத் தலைவர் வெளியிடுவார். சச்சின் டெண்டுல்கரைப் பொருத்த மட்டில் கிரிக்கெட் விளையாட்டில் ஏராளமான சாதனைகளைப் படைத்துள்ளார். பத்ம விபூஷன் உள்பட பல விருதுகளை அவர் பெற்றுள்ளார் என்று அதில் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், சச்சினுக்கு பாரத ரத்னா வழங்க தடை கோரும் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
முன்னதாக, வழக்கறிஞர் என்.கனகசபை பொது நல மனு தாக்கல் செய்திருந்தார். பாரத ரத்னா விருது வழங்குவதற்கான விதிமுறைகள் குறித்து கடந்த 1955-ம் ஆண்டு குடியரசுத் தலைவர் அறிவிக்கை வெளியிட்டுள்ளார். அதன்படி கலை, இலக்கியம் மற்றும் அறிவியல் துறைகளில் மிக உயர்ந்த சேவை புரிந்தவர்களுக்கு மட்டுமே பாரத ரத்னா விருது வழங்கலாம்.
இந்நிலையில் விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ் மற்றும் கிரிக்கெட் வீரர் டெண்டுல்கர் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1955-ம் ஆண்டின் குடியரசுத் தலைவர் அறிவிக்கையின்படி டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க முடியாது என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.