தேவயானிக்கு எதிராக சதி: சல்மான் குர்ஷித் குற்றச்சாட்டு

தேவயானிக்கு எதிராக சதி: சல்மான் குர்ஷித் குற்றச்சாட்டு
Updated on
2 min read

இந்திய துணைத் தூதர் தேவயானி ஒரு அப்பாவி. சதி வலையில் அவர் சிக்கவைக்கப்பட்டுள்ளார். பணிப்பெண்ணின் குடும்பத்தினருக்கு விசா வழங்கியதன் மூலம் அமெரிக்க அரசு முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார்.

இந்நிலையில், தேவயானிக்கு முழுமையான சட்டப் பாதுகாப்பு கிடைக்கும் வகையில், அவரை ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்திய தூதரக அலுவலகத்துக்குப் பணியிட மாற்றம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

தனது வீட்டுக்குப் பணிப்பெண் சங்கீதாவை விசா மோசடி செய்து அமெரிக்காவுக்கு அழைத்து வந்ததாகவும், அவருக்கு குறைந்த ஊதியம் கொடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்ட புகாரின் பேரில் தேவயானியை கடந்த வியாழக்கிழமை அமெரிக்க போலீஸார் கைது செய்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவை களிலும் சல்மான் குர்ஷித் பேசியதாவது:

தேவயானியை பொது இடத்தில் கைவிலங்கிட்டு கைது செய்தது, ஆடையை அகற்றி சோதனையிட்டது, மற்ற குற்றவாளிகளுடன் அறையில் அடைத்து வைத்தது ஆகியவற்றை வன்மையாக கண்டிக்கிறேன்.

இந்த விவகாரத்தை இந்தியா திறம்பட கையாளும். இது நாட்டின் கவுரவம் சம்பந்தப்பட்ட விவகாரம். தேவயானியின் கண்ணியத்தை காப்பாற்றுவது எனது பொறுப்பு. அவரை இந்தியாவுக்கு அழைத்து வருவேன். இதைச் செய்து முடிக்காமல் நாடாளுமன்றத்துக்கு வரமாட்டேன்.

சதிச் செயல்

தேவயானிக்கு எதிராக சதி நடைபெற்றுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. அவர் குற்றம் புரிந்ததற்காக கைது செய்யப்பட வில்லை. குற்றச் செயலுக்கு உடந்தையாக இல்லை என்பதால்தான் கைது செய்யப்பட்டார்.

கடந்த ஜூன் மாதத்தில் தேவயானி வீட்டின் பணிப்பெண் சங்கீதா தலைமறைவாகி விட்டார். இது தொடர்பாக நியூயார்க் காவல் துறையினரிடம் புகார் அளித்த பின்பும், நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.

இதைத் தொடர்ந்து சங்கீதாவின் பாஸ்போர்ட்டை இந்தியா ரத்து செய்தது. அவரை தேடித் தரும் விவகாரத்தில் நியூயார்க் போலீஸாருடன் இந்தியத் தூதரகம் தொடர்பில் இருந்து வந்தது.

இந்நிலையில், தன்னை வழக்கறிஞர் என்று அறி முகப்படுத்திக் கொண்ட ஒருவர், தேவயானியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இந்த விவகாரத்தை தீர்த்துவைப்பதாகக் கூறியுள்ளார். அவர் கூறியபடி செயல்பட்டால், பணிப்பெண்ணுக்கு நிரந்தர குடியுரிமையும், இழப்பீடும் கிடைக்கும் வகையில் இருந்தது.

விசா முறைகேடு

அந்த வழக்கறிஞரின் யோசனைக்கு தேவயானி உடன்பட வில்லை. இந்த தொலைபேசி அழைப்பு தொடர்பாக நியூயார்க் போலீஸாரிடம் தெரிவித்த பின்பும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், தலைமறைவான பணிப்பெண்ணின் புகாரின் பெயரில் டிசம்பர் 12-ம் தேதி தேவயானியை நியூயார்க் போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஆனால், அதற்கு முன்னதாக டிசம்பர் 10-ம் தேதி சங்கீதாவின் கணவர் மற்றும் இரு குழந்தைகளுக்கு அமெரிக்கா விசா அளித்துள்ளது. அவர்கள் மூவரும் நியூயார்க் சென்றுள்ளனர்.

சங்கீதாவும், அவரது குடும்பத்தி னரும் சட்டவிரோதமான முறையில் அமெரிக்கக் குடியுரிமையை பெற முயற்சிக்கின்றனர் என்று இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையிலும், அமெரிக்கா அவர்களுக்கு விசா வழங்கியது. இதன் மூலம் விசா முறைகேட்டில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாகத் தெரியவருகிறது” என்றார்.

இதற்கிடையே தேவயானிக்கு எதிரான புகார் தொடர்பாக இந்தியத் தூதரகத்துக்கு உரிய தகவல்களை அளித்ததாக அமெரிக்கா கூறியுள்ளதை இந்திய அதிகாரிகள் மறுத்துள்ளனர். முழுமையான தகவல்களை அமெரிக்கா தரவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

ஐ.நா. பணிக்கு மாற்றம்

இதற்கிடையே அமெரிக்கா வுக்கான இந்தியத் துணைத் தூதராக இருந்த தேவயானியை, ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதிகள் குழுவுக்கு பணியிட மாற்றம் செய்ய இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

முந்தைய பதவியில் தூதரக ரீதியான நடவடிக்கைகளுக்கு மட்டுமே அவருக்கு சட்டப் பாது காப்பு இருந்தது. இப்போது ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்திய நிரந்தரப் பிரதிநிதிகள் குழுவில் தேவயானி இடம்பெற்றுள்ளதன் மூலம், அவருக்கு வியன்னா உடன்படிக் கையின்படி தூதர்களுக்கு வழங்கப்படும் முழுமையான சட்டப் பாதுகாப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in