Last Updated : 25 Mar, 2017 08:43 AM

 

Published : 25 Mar 2017 08:43 AM
Last Updated : 25 Mar 2017 08:43 AM

டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு நடிகர்கள் விஷால், பிரகாஷ் ராஜ் நேரில் ஆதரவு

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளுக்கு தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பில் விஷால், பிரகாஷ் ராஜ், பாண்டிராஜ் ஆகியோர் நேற்று நேரில் ஆதரவு தெரிவித்தனர்.

தேசிய தென் இந்திய நதிகள் இணைப்பு சங்கம் சார்பில் டெல்லியில் கடந்த 14-ம் தேதி முதல் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தமுறை தீவிரமாக நடைபெற்று வரும் போராட்டத்திற்கு அரசியல் தலைவர்கள், சமூக அமைப்பினர் உட்பட பல்வேறு தரப்பினரும் நேரில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால் அன்றாடம் ஏதாவது ஒரு நடவடிக்கையில் தமிழக விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று 10-வது நாளாக விவசாயிகள் போராட்டத் தில் ஈடுபட்டிருந்தபோது, தென் னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பில் அதன் பொதுச்செயலாளரான விஷால், நடிகர் பிரகாஷ் ராஜ், இயக்குநர் பாண்டிராஜ் ஆகியோர் வந்திருந்தனர்.

ஜந்தர் மந்தரில் உள்ள போராட்ட பந்தலில் காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை இவர்கள் விவசாயிகளுடன் அமர்ந்திருந்தனர். இவர்களின் ஆதரவால் விவசாயிகள் உற்சாகமடைந்தனர்.

இதுகுறித்து செய்தியாளர் களிடம் நடிகர் பிரகாஷ் ராஜ் கூறும் போது, “கார்ப்பரேட் நிறுவனங்களின் பல லட்சம் கோடி ரூபாய் கடனை ரத்து செய்யும் மத்திய அரசு விவசாயிகளின் கடனை மட்டும் கண்டுகொள்ளாமல் இருப்பது சரியல்ல. விளை பொருட்களுக்கு நல்ல விலை அளிப்ப துடன் அவர்கள் பிரச்சினை நிரந்தரமாக தீர்க்கப்பட வேண்டும். வறட்சி பாதிப்புக்காக மத்திய அரசு அளித்த நிவாரணம் மிகவும் குறைவு. விவசாயிகளுக்கு ஆதர வளிக்கவே சென்னையில் இருந்து நாங்கள் வந்தோம்” என்றார்.

மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் வறட்சியால், வங்கிக் கடனை அடைக்க முடியாமல் விவ சாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் சில ஆண்டுகளுக்கு முன் வரை அதிகம் நிகழ்ந்தன. இதை தடுக்கும் முயற்சி யாக நடிகர் அமிதாப் பச்சன், வார்தா ரோட்டரி கிளப் மூலமாக கடந்த 2012 ஜூலையில் 114 விவசாயி களுக்கு ரூ. 39 லட்சம் வழங்கினார்.

இதை நினைவுகூர்ந்து ‘தி இந்து’ எழுப்பிய கேள்விக்கு நடிகர் விஷால் கூறும்போது, “எங்களால் முடிந்த அளவுக்கு விவ சாயிகளின் கடன்தொகை ரூ.30 ஆயிரம், ரூ.40 ஆயிரம் என நாங்கள் அவ்வப்போது அளித்து வரு கிறோம். இவ்வாறு அளிக்கப்பட்ட தொகை எவ்வளவு என்று நாங்கள் கணக்கு பார்ப்பதில்லை. தற்போது ‘ரவுண்ட் டேபிள்’ அமைப்பின் மூலம் ஒரு நிகழ்ச்சியை நடத்தி, பாதிக்கப்பட்ட 10 விவசாயிகளின் குடும்பத்துக்கு மாதந்தோறும் ரூ.3000 அளித்து வருகிறோம். இவர்களின் குழந்தைகளுக்கு இலவசக் கல்வியும் அளித்து வருகிறோம். நீங்கள் கேட்கும் விஷயம் விவசாயிகளுக்காக ஒரு அரசு செய்ய வேண்டியது ஆகும். எனவே, விவசாயிகளுக்காக அரசை முதலில் செய்ய வைக்க வேண்டும். இதற்கான முயற்சியாகவே நாங்கள் இங்கு வந்தோம்” என்றார்.

பிறகு விஷால் உள்ளிட்ட மூவரும், போராட்டக்குழு தலைவர் அய்யாகண்ணு உள்ளிட்ட சிலருடன் சாஸ்திரி பவனில் உள்ள சமூகநீதித் துறை அமைச்சர் ராமதாஸ் அத்தவாலேவை சந்திக்கச் சென்றனர். அங்கு அவர் இல்லை என்பதால் அங்கிருந்த மத்திய கப்பல் மற்றும் சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்தனர். பிரதமர் மற்றும் நிதி அமைச்சரை சந்தித்து பேச ஏற்பாடு செய்யும்படி அவர்கள் வலியுறுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x