

கர்நாடகாவின் கிருஷ்ண ராஜ சாகர் அணையில் இருந்து தமிழகத்துக்கு நொடிக்கு 11 ஆயிரம் கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்து கர்நாடக மாநில விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தலைக் காவிரி, பாகமண்டலா, திரிவேணி சங்கமா, மடிக்கேரி உள்ளிட்ட இடங் களில் மிதமான மழை தொடர்ந்து பெய்துவருகிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டு, கிருஷ்ண ராஜசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித் துள்ளது.
நேற்று மாலை நிலவரப்படி அணைக்கு நொடிக்கு 19 ஆயிரத்து 975 கன அடி நீர் வரத்து உள்ளது. 124.8 அடி உயரமுள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 95.12 அடியாக உயர்ந்திருக்கிறது. இதைத்தொடர்ந்து அணையில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப் பட்டுள்ள நீரின் அளவு அதிகரிக் கப்பட்டுள்ளது. நேற்று மாலை நிலவரப்படி கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து தமிழகத்துக்கு நொடிக்கு 10 ஆயிரத்து 900 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதாக கர்நாடக நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு நீர் திறந்துவிட்டதற்கு கர்நாடக மாநில விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பின் மண்டியா மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் நேற்று சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கர்நாடக முதல்வர் சித்தராமையா வுக்கு எதிராகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர். இதனால் பெங்களூரு - மைசூரு சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக் கப்பட்டது.
இது தொடர்பாக கர்நாடக மாநில விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகி மாதே கவுடா கூறும்போது, “கடந்த ஆண்டு கடும் வறட்சி ஏற்பட்டதால் கிருஷ்ணராஜசாகர் அணை முழு கொள்ளளவை எட்டாததால் பாசனத்துக்கு போதுமான நீர் திறக்கப்படவில்லை.
இதே போல பெங்களூரு, மைசூரு, ராம்நகர் உள்ளிட்ட நகரங்களுக்கும் உரிய முறையில் குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக மழை பெய்து வருவ தால் கிருஷ்ணராஜசாகர் அணை மெல்ல நிரம்பி வருகிறது. அணை முழு கொள்ளளவை எட்டாத நிலை யில் தமிழகத்துக்கு நீர் திறக்கப் பட்டதை ஏற்க முடியாது. கர்நாடக அரசு உடனடியாக நீரை நிறுத்த வேண்டும். இல்லாவிடில் தொடர் போராட்டம் நடத்துவோம்'' என்றார்.
நீதிமன்ற உத்தரவே காரணம்
இதுதொடர்பாக காவிரி நீர் நிர்வாக கழக அதிகாரிகளிடம் பேசியபோது, “காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பின் படி, ஜூலை மாத இறுதிக்குள் தமிழகத்துக்கு கர்நாடகா 34 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டும். தற்போது ஜூலை மாதத்தில் 15 நாட்கள் நிறைவடைந்துள்ளதால் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும் வகையில் தமிழகத்துக்கு நீர் திறக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டத்தை பொறுத்து தமிழகத்துக்கு வழங்கப் பட வேண்டிய நீரை மீதமுள்ள நாட்களில் திறந்துவிட இருக் கிறோம்'' என்றார்.