

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் தனக்கு நம்பிக்கை இல்லை என டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டமன்றத் தேர்தலில், பாஜக அதிக இடங்களை கைப்பற்றும் என தனியார் நிறுவனங்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த கேள்விக்கு பதிலளித்த டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித், தேர்தல் கருத்துக் கணிப்புகளை கருத்தில் கொண்டு கட்சி செயல்படவில்லை, எனவே தேர்தல் கருத்துக் கணிப்புகளில் தனக்கு நம்பிக்கை இல்லை, என்றார்.
டெல்லி முதல்வராக 3 முறை பதவி வகித்த ஷீலா தீட்சித்தை எதிர்த்து முதல்வர் பதவிக்கு பாஜக சார்பில் ஹர்ஷவர்தனும், ஆம் ஆத்மி கட்சி சார்பில் அரவிந்த் கேஜ்ரிவாலும் போட்டியிட்டுள்ளனர்.
70 தொகுதிகளில் பாஜக-வுக்கு 33-ம்; காங்கிரசுக்கு 19-ம்; ஆம் ஆத்மி கட்சிக்கு 18-ம் வசப்படும் என கருத்துக் கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
3 மாநிலங்களில் பாஜக-வுக்கு வெற்றி முகம் என வெளியான கருத்துக் கணிப்புகள் முற்றிலும் அர்த்தமற்றது, கருத்துக் கணிப்பு முடிவுகளை குப்பைத் தொட்டியில் தூக்கி எறிய வேண்டும் என ஏற்கெனவே காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.