

உத்தரப் பிரதேச சட்டப் பேரவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டத் தேர்தல் வரும் 11-ம் தேதி நடைபெறவுள்ளது. கட்சியின் அதிகாரத்தை மகனும், முதல்வருமான அகிலேஷ் யாதவ் கைப்பற்றிக் கொண்டதாலும், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொண்டதாலும் இந்தத் தேர்தலில் பிரச்சாரம் செய்யப் போவதில்லை என சமாஜ் வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் அறிவித்திருந்தார்.
அதேபோல் அவரது சகோதரரும், அகிலேஷ் யாதவின் சித்தப்பாவுமான சிவ்பால் சிங்கும் தேர்தல் முடிந்த பின் புதிய கட்சித் தொடங்கப்போவதாகவும் அதிருப்தி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யப் போவதாகவும் அறிவித்திருந்தார்.
கடந்த வாரம் மீண்டும் செய்தி யாளர்களுக்குப் பேட்டியளித்த முலாயம் சிங் யாதவ் 9-ம் தேதி முதல் பிரச்சாரத்தை தொடங்குவதாகவும், முதலில் தனது சகோதரர் சிவ்பால் சிங்கை ஆதரித்து வாக்கு சேகரிக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தார்.
இதனால் சமாஜ்வாதி கட்சிக்குள் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இந்தச் சூழலில் தனது முடிவை திடீரென மாற்றிக் கொண்டுள்ள முலாயம் சிங் யாதவ், சமாஜ்வாதி காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப் போவதாக அறிவித்துள்ளார். மேலும் தேர்தலில் சமாஜ்வாதி வெற்றிப் பெற்றால் அகிலேஷ் யாதவ் தான் மீண்டும் முதல்வராக பதவியேற்பார் என்றும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே நேற்று செய்தியாளர் களிடம் அவர் கூறும்போது, ‘‘கட்சி மற்றும் குடும்பத்துக்குள் எந்த பிளவும் இல்லை. அகிலேஷ் தான் மீண்டும் முதல்வராக பதவியேற் பார். கூட்டணி கட்சிகளுக்காக நாளை முதல் (இன்று) நான் பிரச் சாரம் செய்யப் போகிறேன். அமர்சிங்கும் விரக்தி அடைய வில்லை. அகிலேஷுக்கு கட்சியில் முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. சிவ்பால் சிங்கின் பேச்சால் யாரும் அதிருப்தி அடையவில்லை. புதிய கட்சித் தொடங்குவது பற்றி சிவ்பால் யாருடனும் பேசவில்லை. அப்படி அவர் சொன்னது கூட கோபத்தால் தான். எனவே இப்பிரச் சினையை இத்துடன் விட்டு விடுங் கள்’’ என்றார்.