Last Updated : 26 Sep, 2016 01:28 PM

 

Published : 26 Sep 2016 01:28 PM
Last Updated : 26 Sep 2016 01:28 PM

சகாபுதீன் வழக்கில் ராம் ஜெத்மலானி வாதிடுவதால் சர்ச்சை

பிஹாரின் சர்ச்சைக்குரிய அரசியல்வாதி முகம்மது சகாபுதீனுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி வாதிட உள்ளார்.

இவர், பிஹாரில் ஆளும் கூட்டணியில் உள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி எம்.பி. என்பதால் சர்ச்சை எழுந்துள்ளது.

58 குற்ற வழக்குகளை எதிர்கொண்டுவரும் சகாபுதீனுக்கு கடந்த 10-ம் தேதி பாட்னா உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இதையடுத்து சுமார் 11 வருட சிறைவாசத்துக்கு பிறகு, பிஹாரின் பாகல்பூர் சிறையில்இருந்து அவர் விடுதலையானார். பிஹாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சியில் இருக்கும் நிலையில் முதல்வர் நிதிஷ்குமார் அரசின் தலையீடு காரணமாகவே சகாபுதீன் விடுவிக்கப்பட்டதாக, எதிர்க்கட்சியான பாஜக குற்றம் சாட்டி வருகிறது.

இந்நிலையில் சகாபுதீன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அவரால் பாதிக்கப்பட்டவரான சந்திரேஸ்வர் பிரசாத் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். பிஹார் அரசு தனியே மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், சகாபுதீனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த வழக்கில் சகாபுதீனுக்காக ராம் ஜெத்மலானி ஆஜராக உள்ளார். இவர் லாலு கட்சியின் மாநிலங்களவை எம்.பி. என்பதால், இது தேசிய அரசியலில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இது குறித்து பிஹாரின் முன்னாள் துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான சுசில்குமார் மோடி கூறும்போது, "ஜெத்மலானி ஒரு வழக்கறிஞர் மட்டும் அல்ல. பிஹாரைஆளும் அரசில் இடம்பெற்றுள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளம்சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். அவர் சகாபுதீனுக்கு ஆதரவாக வாதிடுவது எந்த வகையிலும் சரியல்ல. சகாபுதீன் வழக்கில் நிதிஷ் அரசு அதிக ஆர்வம் காட்டுவதில்லை" என்றார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் லாலுவின் மகனும் பிஹார் துணை முதல்வருமான தேஜஸ்வி பிரசாத் கூறும்போது, "ஜெத்மலானியை தனது வழக்கில் வாதிடவைப்பது சகாபுதீனின் முடிவு ஆகும். இதில் எங்கள் கட்சிக்கு எந்தத் தொடர்பும் இல்லை. அவரது தொழில் தனது கட்சிக்காரர்களுக்காக வாதிடுவது ஆகும். இதற்கு முன் ஜெத்மலானி பாஜகவில் இருந்தபோது, அக்கட்சியினருக்காக உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார்" என்றார்.

ஜெத்மலானி இதற்கு முன் பாஜக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார். கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக, ஜெத்மலானியை கடந்த 2013-ல் 6 ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து பாஜக நீக்கியது.

இதன் பிறகு கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் லாலுவுக்காக ஆஜராகி வாதிட்டு வந்தார் ஜெத்மலானி. இதனால் அவரை லாலு தனது கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x