

இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் நடிகர்கள் பிரபாஸ், ராணா, நடிகைகள் அனுஷ்கா, தமன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘பாகுபலி 2' திரைப்படம் வருகிற 28-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. நடிகர் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தை கர்நாடகாவில் வெளியிட கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. கடந்த 2008-ம் ஆண்டு நடந்த காவிரி நதி நீர் போராட்டத்தின்போது, நடிகர் சத்யராஜ் கன்னட மக்களை மிகவும் இழிவாகப் பேசினார். எனவே அவர் நடித்த ‘பாகுபலி 2’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற 28-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்தன.
இதையடுத்து தனது பேச்சுக்காக நடிகர் சத்யராஜ், கன்னடர்களிடம் வருத்தம் தெரிவித்தார்.
இந்நிலையில் கன்னட சலுவளி கட்சியின் தலைவரும் கன்னட அமைப்புகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான வாட்டாள் நாகராஜ் தலைமையில் பெங்களூருவில் நேற்று கன்னட அமைப்புகளின் தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் சா.ரா.கோவிந்து, கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பின் தலைவர் கிருஷ்ணா ஷெட்டி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதையடுத்து வாட்டாள் நாகராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
‘‘நாங்கள் நடிகர் சத்யராஜுக்கு எதிராக போராட்டம் நடத்தினோமே தவிர, ‘பாகுபலி 2’ திரைப்படத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்த வில்லை. இயக்குநர் ராஜ மவுலி மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறோம். கன்னடர்களை இழிவுபடுத்திய நடிகர் சத்யராஜுக்கு தக்க பாடம் கற்பிக்கவே ‘பாகுபலி 2’ திரைப்படத்தை எதிர்த்தோம். இப்போது சத்யராஜ் கன்னடர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.
எனவே அவரது வேண்டு கோளை ஏற்று எங்களது போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம். வருகிற 28-ம் தேதி நடைபெற இருந்த முழு அடைப்பு போராட்டத்தையும் கைவிடுகிறோம். அதே வேளையில் எதிர்காலத்தில் நடிகர் சத்யராஜ் கவனமாக பேச வேண்டும் என எச்சரிக்கை விடுக்கிறோம்''என்றார். இதையடுத்து வரும் 28-ம் தேதி ‘பாகுபலி 2’ திரைப்படம் கர்நாடகாவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.