அம்மாவின் பிறந்தநாளைக் கொண்டாடிய மும்பை போலீஸ்!

அம்மாவின் பிறந்தநாளைக் கொண்டாடிய மும்பை போலீஸ்!
Updated on
1 min read

மத்திய மும்பையின் வடாலா பகுதியில் 25 ஆண்டு காலமாக தனியாக வசிக்கும் லலிதா சுப்ரமணியம் என்ற பாட்டியின் வீட்டுக்கே வந்து அவரது பிறந்தநாளை காவல் துறையினர் கேக் வெட்டிக் கொண்டாடி வியப்பில் ஆழ்த்தினர்.

மும்பை காவல்துறையினர் மூத்த குடிமக்களுக்காக '1090' என்ற ஹெல்ப்லைன் மூலம் உறுதுணைபுரிந்து வருகின்றனர். மூத்த குடிமக்கள் அவசர உதவியோ அல்லது தனிமையின் துயரத்தைப் போக்கவோ இந்த அவசர உதவி எண்ணை நாடினால் உடனடியாக காவல்துறையினர் உரிய உதவிகளை செய்வர்.

மறைந்த முன்னாள் உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீல் முன்முயற்சியில் உருவாக்கப்பட்ட இந்தத் திட்டம் தொடர்ந்து மும்பை காவல் துறையினரால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வடலாவில் வசிக்கும் பாட்டிக்கு அவரது பிறந்தநாளில் திங்கள்கிழமை வியப்பில் ஆழ்த்தியதுடன் மகிழ்வித்து மகிழ்ந்திருக்கிறார்கள் மும்பை காவல் துறையினர்.

லலிதாவின் மகன்களில் இருவர் அமெரிக்காவில் வசிக்கின்றனர். இன்னொருவர் பெங்களூருவில் வசிக்கிறார். இவர்கள் ஆண்டுக்குள் சில தினங்கள் மட்டுமே மும்பை வந்து அவரைப் பார்த்துவிட்டுப் போவார்கள். தங்கள் தாயின் 83-வது பிறந்தநாளையொட்டி, லலிதாவின் மகன்களால் மும்பை வர முடியவில்லை.

இந்த நிலையில், தங்கள் வசம் இருந்த மூத்தக் குடிமக்களின் பட்டியலில் இருந்த லலிதாவின் விவரத்தை அறிந்து, அவரது பிறந்தநாளைக் கொண்டாடுவது என மடுங்கா காவல் நிலைய போலீஸார் முடிவு செய்தனர்.

அதன்படி, துணை கமிஷனர் அசோக் தூதே, போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.கக்கத் மற்றும் லலிதாவுக்கு அவ்வப்போது தொலைபேசி மூலம் நலம் விசாரிக்கும் காவலர் ஆகியோர் அவரது வீட்டுக்குச் சென்றனர். லலிதா பாட்டியை கேக் வெட்டவைத்து அவரது பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடினர். காவல்துறையினரின் இந்தச் செயலால் அவர் நெகிழ்ந்து போனார்.

காவல் துறை அதிகாரி கக்கத் கூறும்போது, "அவர் என் அம்மா மாதிரி. இந்தப் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எங்கள் அம்மா மகிழ்ச்சி அடைந்தார். தன் பிள்ளையால் அடிக்கடி வீட்டுக்கு வர முடியாத சூழலில், காவல் துறையினரின் உறுதுணையும் அன்பும் நெகிழவைப்பதாகச் சொன்னார்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in