

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 'மை பெட்ரோல் பம்ப்' என்ற தனியார் நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் சார்பில் நாட்டிலேயே முதல் முறையாக கடந்த 15-ம் தேதி வீட்டு வாசலுக்கே டீசல் கொண்டு வந்து விற்பனை செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
டீசல் தேவைப்படுவோர் 'மை பெட்ரோல் பம்ப்' நிறுவனத்தை தொலைபேசி மூலமாகவோ, செயலி மூலமாகவோ தொடர்பு கொண்டால், அவர்களது இடத்துக்கே டீசல் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது.
பெங்களூருவில் முதல் கட்டமாக 950 லிட்டர் கொள்ளளவு கொண்ட 3 வாகனங்கள் டீசல் விற்பனைக்காகப் பயன் படுத்தப்படுகிறது. 100 லிட்டர் வரை டீசல் வாங்குவோரிடம் டெலிவரி கட்டணமாக ரூ.99 வசூலிக்கப்படுகிறது. ‘100 லிட்ட ருக்கு மேல் ஒவ்வொரு லிட்ட ருக்கும் ஒரு ரூபாய் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படும்’ என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைவர் ஆஷிஷ் குமார் குப்தா கூறுகையில், 'நாட்டில் ஆண்டுக்கு சுமார் 77 மில்லியன் மெட்ரிக் டன் டீசல் தேவைப்படுகிறது. இதேபோல 22 மில்லியன் மெட்ரிக் டன் பெட்ரோல் பயன் படுத்தப்படுகிறது.
கனரக வாகனங்கள் ,தொழில் நிறுவனங்கள் தொடங்கி விவசாயம் வரை பல துறைகளில் டீசல் பயன்படுத்தப்படுகிறது. முதல்கட்டமாக டீசல் விற் பனையைத் தொடங்கியுள்ளோம். அடுத்ததாக பெட்ரோல் விற்பனை யையும் தொடங்க திட்டமிட்டுள் ளோம்' என்றார்.