

மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் நீக்கப்பட்டு புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும். எரிசக்தித் துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு நிதித் துறை அளிக்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
வரும் 30-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. அப்போது, அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என டெல்லி அதிகார வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
கடந்த 2014-ம் ஆண்டு பாஜக அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு, அமைச்சர்களின் செயல்பாடு குறித்து சுயமதிப்பீடு அறிக்கையை பிரதமர் மோடி கேட்டுள்ளார். வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல்களுக்காக புதிய திட்டங் களை அறிவிப்பதை மனதில் வைத்து அமைச்சர்களின் செயல் பாடுகளை மோடி மதிப்பிடுவார் எனக் கூறப்படுகிறது.
அமைச்சரவையில் புதியவர் களுக்கு வாய்ப்பளிக்கப்படலாம். அதேசமயம் 75 வயதுக்கு மேற்பட்ட அமைச்சர்கள் நீக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூறும் போது, “பாஜக நாடாளுமன்ற குழு கூட்டத்தில் அமைச்சரவை மாற்றம் குறித்து முடிவெடுக்கப்படும்” என்றார்.
பியூஸ் கோயல்
மோடியின் அமைச்சரவையில் மிகச் சிறப்பான செயல்பாடுகளை மேற்கொண்டுவரும் மின் துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு நிதித் துறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமரின் நம்பிக்கையைப் பெற்ற அருண் ஜேட்லிக்கு இரண்டாவது முறையாக பாது காப்பு அமைச்சகம் அளிக்கப் படலாம். அடுத்த ஆண்டு கோவா வில் நடைபெறவுள்ள தேர்தலில் வெற்றியைத் தக்கவைக்க மனோகர் பாரிக்கரை மீண்டும் கோவாவுக்கு அனுப்ப பாஜக தலைமை விரும்புவதாகத் தெரிகிறது.
சிறப்பாக செயல்படும் நிர்மலா சீதாராமன், கிரண் ரிஜிஜு, ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் உள் ளிட்டோருக்கு கேபினட் அந்தஸ்து வழங்கப்படலாம்.
அசாம் முதல்வராக சர்வானந்த சோனோவால் பொறுப்பேற்றுள்ள தால், அவர் பொறுப்பு வகித்த விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் துறை அமைச்சகம் காலியாக உள்ளது. இதனை, பிரதமர் அலுவலகங்கள் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.