Last Updated : 12 Nov, 2014 09:57 AM

 

Published : 12 Nov 2014 09:57 AM
Last Updated : 12 Nov 2014 09:57 AM

நரேந்திர மோடியின் ஆட்சிக் காலத்தில் நாடு முழுவதும் சம்ஸ்கிருதம், யோகாவை பள்ளிகளில் போதிக்க‌ வேண்டும்: இந்து சம்மேளன‌ மாநாட்டில் சிவக்குமார சுவாமி பேச்சு

பாஜக ஆட்சிக் காலத்தில் நாடு முழு வதும் உள்ள பள்ளிகளில் சம்ஸ் கிருதத்தை போதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல யோகா வையும் ஒரு பாடமாக சேர்க்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் அறிவுறுத்தியிருப்பதாக சிவகங்கா மடாதிபதி சிவக்குமார சுவாமி தெரிவித்தார்.

விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் 50-வது ஆண்டு விழாவையொட்டி பெங்களூருவை அடுத்த தும்கூரில் `அகில பாரத இந்து சம்மேளன மாநாடு' செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இரு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பாகவத், விஷ்வ இந்து பரிஷ‌த் அமைப்பின் தலைவர் அசோக் சிங்கால், வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீ ரவிசங்கர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் நாடு முழுவதிலும் உள்ள 500-க்கும் மேற்பட்ட மடாதிபதிகளும்,5000-க்கும் மேற்பட்ட இந்துத்துவா தொண்டர்களும் கலந்துகொண்டனர். இதனால் தும்கூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

தும்கூரில் உள்ள சித்தகங்கா மடத்தில் நடைபெறும் மாநாட்டை 107 வயதான மூத்த மடாதிபதி சிவக்குமார சுவாமி செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

இன்று சமூகத்தில் நிலவும் பிரச் சினைகளுக்கு ஆன்மிகமே தீர்வு. இந்து மதம் வெறுமனே கடவுளை வணங்குவது மட்டுமல்ல. இதில் அறிவியல், தத்துவம், வாழ்வியல் கூறு கள் அடங்கி இருக்கின்றன. இதனை உலகில் உள்ள அனைத்து மதத்தின ருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும். நம்முடைய முன்னோர்கள் பல நூறு ஆண்டுகள் நலமோடும் அமைதியான மனநிலையோடும் வாழ்ந்தார்கள்.

அதற்கு முக்கிய காரணம் நம் முடைய கலாச்சாரத்தை கடைப்பிடித் ததுதான். எனவே நல்வாழ்க்கைக்கு வழிகாட்டியாக திகழும் கலாச் சாரத்தை மறந்துவிடக்கூடாது. செல்வத் தாலும் கல்வியாலும் தொழில் நுட்பத் தாலும் நிம்மதியான வாழ்க்கையை தர முடியாது. ஆரோக்கியமான உடல்நிலையை தர முடியாது.

மோடிக்கு அறிவுரை

கடந்த செப்டம்பரில் பிரதமர் நரேந்திர மோடி என்னைப்பார்க்க இங்கு வந்தார். அப்போது இந்தியா வின் பண்பாட்டையும் கலாச்சாரத் தையும் பாதுகாக்க ஆன்மிகமே சிறந்த‌ வழி. அதற்கு சிறுவர்கள், இளைஞர் க‌ளை ஆன்மிக வழிக்கு கொண்டுவர‌ வேண்டும்.எனவே தொடக்க பள்ளி முதல் கல்லூரி வரை மாணவர்களுக்கு தியான பயிற்சி கட்டாயம் அளிக்க வேண்டும்.

குஜராத்தை போல அனைத்து மாநிலங்களிலும் கல்வித்திட்டத்தில் யோகாவை பாடமாக சேர்க்க வேண்டும். சம்ஸ்கிருத மொழிக்கு இந்த ஆட்சிக்காலத்தில் புத்துயிர் ஊட்ட வேண்டும். அதற்கு நாடு முழுவதிலும் உள்ள பள்ளிகளில் சம்ஸ்கிருதத்தை போதிக்க வேண்டும். அப்போதுதான் ஆங்கில மோகமும் மேற்கத்திய கலாச்சாரமும் அழிந்து பாரத கலாச்சாரம் வளரும் என அறிவுரைக் கூறினேன். அதனை செயல்படுத்துவதாக மோடி உறுதி அளித்தார்'' என்றார்.

இதனைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் தலைவர் மோகன் பாகவத், வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீ ரவிசங்கர் உள்ளிட்டோர் பேசினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x