

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக் பூர் மாவட்டத்தில் 10 இளைஞர்கள் ஒன்றிணைந்து 332 கிலோ எடையில் சமோசா உருவாக்கியுள்ளனர். இதனை கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறச் செய்வதற் கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கோரக்பூர் மாவட்டம் கோபால் நகரில் சாலையோர சிறு உணவு விடுதி நடத்தி வருபவர் ரிதேஷ் சோனி (20). இவர் தனது நண்பர்கள் 9 பேருடன் இணைந்து இந்த மிகப்பெரிய சமோசாவை உருவாக்கியுள்ளனர். இதுதான் உலகின் மிகப்பெரிய சமோசா என அவர்கள் உரிமை கோரியுள்ளனர்.
“கடந்த ஆண்டு கதாரியா கடை வீதியைச் சேர்ந்தவர்கள் உலகின் மிகப்பெரிய ஜிலேபியை உரு வாக்கினர். அதைப்பார்த்துதான் இந்த நகரத்தை பிரபலமாக்க எங்களால் முடிந்த வகையில் சமோசாவை உருவாக்கியுள்ளோம் என சோனி தெரிவித்துள்ளார்.
குழுவில் இடம்பெற்றுள்ள நவீன் திவாரி கூறும்போது, “இங்கிலாந்தின் பிராட்போர்ட் கல்லூரியில் 110 கிலோ எடையில் உருவாக்கப்பட்ட சமோசாதான், உலகின் மிகப்பெரிய சமோசா என்ற சாதனையை வைத்துள்ளது. நாங்கள் உருவாக்கியிருப்பது அதை விட மூன்று மடங்கு பெரியது. கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறு வதன்மூலம் அரசியல்வாதிகளின் கவனத்தை இந்த நகரின் பக்கம் ஈர்க்க முடியும். சுதந்திரம் பெற்ற திலிருந்து இங்கு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படவில்லை. மின்சாரம், கல்வியறிவின்மை போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்” என்றார்.
15 நாட்கள் திட்டமிட்டு இந்த சமோசா உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கள்கிழமை இறுதிப் பணிகளைத் தொடங்கி, செவ்வாய்க் கிழமை காலை தயார்செய்யப்பட்டு, பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
ரூ.40 ஆயிரம் செலவில், 90 கிலோ எண்ணெய், 175 கிலோ கோதுமை மாவு, 200 கிலோ உருளைக்கிழங்கு பயன்படுத்தி இந்த சமோசா செய்யப்பட்டுள்ளது. இந்த சமோசாவின் உயரம் 3 மீட்டர், அதன் மூன்று பக்கங்கள் 2 மீட்டர், 1.5 மீட்டர், 1.5 மீட்டர் என்ற அளவில் உள்ளன. இதன் சுற்றுஆரம் 3 அடி. இந்த சமோசாவை ஏராளமானோர் பார்வையிட்டு வருகின்றனர்.
செலவுத் தொகையில் ரூ.30 ஆயிரத்தை இக்குழுவினரே பங்கிட்டுக் கொண்டுள்ளனர். எஞ்சிய தொகை நன்கொடையாக பெறப்பட்டுள்ளது. இக்குழுவில் அனைவரும் 16 முதல் 30 வயதுடையவர்கள். இதில் 4 பேர் 12-ம் வகுப்பு மாணவர்கள்.
உலக சாதனையாகப் பதிவு செய்வதற்ககா கின்னஸ் சாதனை புத்தக நிர்வாகத்தினரை இக்குழுவினர் அணுகியுள்ளனர்.