

வடகிழக்கு மாநிலங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியை மத்திய அரசு உறுதி செய்யும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி நாளை முதல் இரண்டு நாட்களுக்கு வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
இந்நிலையில், தனது பயணம் தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட்களில், "வடகிழக்கு மாநிலங்களில் மேற்கொள்ளவிருக்கும் 2 நாள் பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். சிக்கிம், அசாம் மாநிலங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறேன்.
நாளை அசாம் செல்கிறேன். அங்கு ஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் வடகிழக்கு மாநில இளைஞர்களை சந்திக்கவுள்ளேன்.
அதன்பின்னர், சிக்கிம் தலைநகர் காங்டாக்கில் நடைபெறும் மாநில வேளாண் அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொள்கிறேன்.
இந்த மாநாட்டில் இயற்கை வேளாண்மையை ஊக்குவித்தல், நீடித்த நிலையான வேளாண் வளர்ச்சியை உறுதிப்படுத்துதல், சூழல்நட்பு சார்ந்த சுற்றுலாக்களை மேம்படுத்துதல் போன்றவை குறித்து ஆலோசிக்கப்படும்.
காங்டாக்கில் உள்ள இயற்கை விவசாயிகள் ஏற்பாடு செய்துள்ள கண்காட்சியிலும் கலந்து கொள்கிறேன்.
வடகிழக்கு மாநிலங்களை இயற்கை வேளாண்மையின் மையமாக உருவாக்க வேண்டும் என்பதே அரசின் லட்சியம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.