இனவெறி தாக்குதல் எதிரொலி: இந்திய தூதரை நேரில் வரவழைத்து நைஜீரியா கண்டனம்

இனவெறி தாக்குதல் எதிரொலி: இந்திய தூதரை நேரில் வரவழைத்து நைஜீரியா கண்டனம்
Updated on
1 min read

நைஜீரிய இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக இந்தியா தூதரை நேரில் வரவழைத்து நைஜீரியா தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

கடந்த 27-ம் தேதி டெல்லியின் கிரேட்டர் நொய்டா பகுதியில் நைஜீரியாவைச் சேர்ந்த இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில், இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய தூதருக்கு நைஜீரியா சம்மன் அனுப்பியது.

இது தொடர்பாக நைஜீரியா தலைநகர் லாகோஸில் உள்ள ஊடகங்களில் வெளியான செய்திகளில், "இந்தியாவில் தொடர்ந்து நைஜீரியர்கள் மீது இனவெறி தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. கடைசியாக கடந்த 27-ம் தேதி தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்திய தூதரிடம் வலியுறுத்தப்பட்டது" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நேரில் வரவழைத்து கண்டனம்:

நைஜீரியாவுக்கான இந்திய தூதர் நாகபூஷண ரெட்டிக்கு நைஜீரிய வெளியுறவு அமைச்சகத்தின் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. இதனை ஏற்று தூதரக அலுவலகத்துக்கு வந்த நாகபூஷண ரெட்டியிடம் நைஜீரிய வெளியுறவுத் துறை மூத்த அமைச்சர் ஒலுசோலா, "போதைப் பழக்கத்தால் இந்திய இளைஞர் உயிரிழந்ததற்கு எந்த வகையில் தாக்குதலுக்குள்ளான நைஜீரிய இளைஞர்கள் காரணமாக முடியும்.

கிரேட்டர் நொய்டா சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே எதிர்காலத்தில் இதுபோன்ற சிக்கல்களை தவிர்க்க முடியும்.

கல்வி கற்க இந்தியா செல்லும் நைஜீரிய மாணவர்கள் இனியும் இதுபோல் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே இத்தகைய அழுத்தத்தை தருகிறோம். உங்கள் அரசாங்கத்திடம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துங்கள்" எனக் கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்த இந்திய தூதர், "நைஜீரிய மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு இந்திய அரசு தனது கண்டனத்தை ஏற்கெனவே பதிவு செய்துள்ளது" எனக் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு ஆப்பிரிக்காவின் காங்கோ நாட்டைச் சேர்ந்த ஒருவர் டெல்லியில் கொலையான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஆண்டு மீண்டும் ஆப்பிரிக்கர்கள் மீது இந்தியாவில் தாக்குதல் நடைபெற்றிருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in