

சமீபத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பயணித்த விமானம் தரையிறங்க தாமதம் ஏற்பட்டதாக வெளியான தகவல் தொடர்பாக, விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
கடந்த நவம்பர் 26-ம் தேதி, ராகுல் காந்தி ரேபரேலிக்குச் சென்றுவிட்டு செஸ்னா தனியார் விமானத்தில் டெல்லி திரும்பினார்.
அந்த விமானம் தரையிறங்க முற்பட்டபோது, "சற்று முன்னர் தரையிறங்கிய விமானப்படையின் ஐ.எல்.76 விமானம் ஓடுபாதையில் வந்து கொண்டிருப்பாதால் இப்போதைக்கு தரையிறங்க வேண்டாம்" என பைலட்டுக்கு விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ராகுல் வந்த விமானம் சிறிது நேரம் வானத்தில் வட்டமடித்துவிட்டு, பின்னர் தரையிறங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், "ராகுல் வந்த விமானத்துக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் இல்லை. ஒடுபாதை விதிமுறைகளின்படி பாதுகாப்பு கருதி தரையிறங்குவதை சிறிது நேரம் ஒத்திப்போடுமாறு பைலட்டை கேட்டுக்கொள்வது வழக்கமானதுதான்" என்றனர்.
இந்த சம்பவத்துக்கு விமானப்படை விமானம், தனியார் விமானம் அல்லது ஏடிசி ஆகியவற்றில் யாருடைய கவனக்குறைவு காரணம் என்பது குறித்து விசாரிக்க விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) உத்தரவிட்டுள்ளது.