

சமாஜவாதி தலைமையிலான உத்தரப் பிரதேச அரசுக்கு நிதி உதவியாகக் கோடிக்கணக்கான ரூபாயை மத்திய அரசு வழங்கி வருகிறது. மக்கள் ஆதாயம் பெறுவதற்கு முன்பே அந்த நிதி மாயமாகி விடுகிறது என்று குற்றம்சாட்டினார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி.
ஹமீர்பூர் அருகேயுள்ள ரா என்ற இடத்தில் புதன்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ராகுல் பேசியதாவது:
மாநில மேம்பாட்டு பணிகளில் முதல்வர் அகிலேஷ் யாதவ் கவனம் செலுத்துவதில்லை. உத்தரப் பிரதேசத்துக்கு நிதி உதவியாகக் கோடிக்கணக்கான ரூபாயை மத்திய அரசு வழங்குகிறது. ஆனால் மாநிலம் மேம்பாடு காணவில்லை.
முலாயம் சிங்கின் சமாஜவாதி கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் 25 ஆண்டு கால ஆட்சியில் உத்தரப்பிரதேசம் வளர்ச்சி அடையவில்லை.
காங்கிரஸ் கட்சி ஆட்சியில் அமர்ந்துள்ள மாநிலங்கள் வளர்ச்சி கண்டுள்ளன என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
உத்தரப்பிரதேச மாநில மக்களின் எதிர்பார்ப்புகளும் விருப்பங்களும் மிகச் சாதாரணமானவையாகவே உள்ளன. இதை மாற்றிக்கொண்டு ஆசைகளை வளர்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் காணும் கனவு பெரிதாக இருக்கட்டும். சின்ன விருப்பங்களை முன்வைக்காமல் வேலை வாய்ப்பைக் கேளுங்கள், புதிதாகத் தொழிற்சாலைகளை அமைக்கும்படி ஆட்சியாளர்களுக்குக் கோரிக்கை வையுங்கள். உங்களுக்கு எல்லாமும் கிடைக்க வேண்டும்.
மாநிலத்தின் பின்தங்கிய பகுதியான புந்தேல்கண்ட் முன்னேற்றம் காண அது பெங்களூர், டெல்லி போன்ற நகரமாக மாறவேண்டும். இதற்கு உங்களது எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருக்கவேண்டும்.
காங்கிரஸை வலுப்படுத்தினால் உங்களது வாழ்விலும் வளத்திலும் மாற்றம் நிச்சயமாக வரும். பின்தங்கிய பகுதியான புந்தேல்கண்ட்டை மேம்படுத்த மத்திய அரசு ரூ. 3000 கோடி நிதி உதவி வழங்கியது. அந்த நிதி உதவி மக்களைச் சென்றடையவில்லை. சாலைகளை மேம்படுத்த, இதர வசதிகளை ஏற்படுத்தித் தர ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உத்தரப் பிரதேசத்துக்கு வழங்கி வருகிறது. அந்த நிதி போய்ச் சேர்ந்த இடம் தெரியவில்லை.
ராஜஸ்தான், கேரளம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட காங்கிரஸ் ஆட்சி வகிக்கும் மாநிலங்களில் நடைபெறும் மேம்பாட்டு பணிகள், நலப்பணிகள் உத்தரப்பிரதேசத்திலும் வரவேண்டும் என்றால் காங்கிரஸை ஆட்சியில் அமர்த்துங்கள். மத்திய அரசின் திட்டப் பலன்கள் மக்களுக்குக் கிடைக்க மாநில அரசு உதவவில்லை. அனைவருக்கும் உணவு கிடைப்பதை உத்தரவாதப் படுத்தும் உணவுப் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ளது அகிலேஷ் யாதவ் அரசு. யாரும் பட்டினி கிடந்து வாடக்கூடாது என்பதற்காகவே கொண்டுவரப்பட்டது உணவு பாதுகாப்பு சட்டம். காங்கிரஸ் கட்சி கொண்டு வந்தது என்பதற்காகவே இதை யாருக்கும் பயன் தராத திட்டம் என்று பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேலி பேசுகின்றன.
உத்தரப் பிரதேசத்துக்குக் குறிப்பாகப் புந்தேல்கண்ட் பகுதிக்கு உணவுப் பாதுகாப்புச் சட்டம் உதவிகரமாக இருக்கும். ஆனால் மக்களவை தேர்தலுக்கு முன் அதை அமல்படுத்திட அகிலேஷ் யாதவ் அரசு தயாராக இல்லை.
உணவு பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தும்படி வாக்காளர்களாகிய நீங்கள்தான் மாநில அரசை நிர்ப்பந்திக்கவேண்டும். இதைச் செய்வேன் அதைச் செய்வேன் என்று பல்வேறு வாக்குறுதிகள் கொடுத்து 2012ல் ஆட்சியைப் பிடித்த சமாஜவாதி கட்சி, வாக்காளர்களுக்குத் தான் சொன்ன எதையும் செய்யவில்லை. எல்லோருக்கும் வேலை கொடுப்போம் என்று சொன்னார்கள். அந்த உத்தரவாதம் என்ன ஆயிற்று என்பதை ஆட்சியாளர்களிடம் கேட்கவேண்டும்.
உத்தரப்பிரதேசம் மாற்றம் அடைய் புந்தேல்கண்ட் பிராந்தியத்தின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்பட வேண்டும். பாலைவன மாநிலமான ராஜஸ்தானை, தொழிற்சாலைகள் நிறைந்த மாநிலமாக மாற்றிவிட்டது காங்கிரஸ். ராஜஸ்தான் சென்று பார்த்தால் முன்னேற்றத்துக்கான பாதை எது என்பது உங்களுக்குப் புரியும் என்றார் ராகுல் காந்தி.
வாக்காளர்களைப் பிரிக்கிறது பாஜக
தியோரியா என்ற இடத்தில் நடந்த கூட்டத்தில் ராகுல் பேசியதாவது:
இரு துருவங்களாக வாக்காளர்களைப் பிரிக்க எதிர்க்கட்சியான பாஜக முயற்சிக்கிறது. அடுத்த ஆண்டில் மக்களவைக்குப் பொதுத்தேர்தல் நடக்கவுள்ளதால் ஆதாயம் கருதித் திட்டமிட்டுச் சில அரசியல்வாதிகள் முசாபர்நகரில் வகுப்பு மோதலைத் தூண்டிவிட்டனர். இது பொதுமக்களுக்குப் புரிந்துவிட்டது. 2009 மற்றும் 2004ல் நடந்த தேர்தல் போலவே இந்த முறையும் காங்கிரஸுக்கே வாக்களிப்பார்கள் என்கிற நம்பிக்கை உள்ளது என்றார் ராகுல்.